மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்திற்கு கொரோனா தொற்று... நேரடியாக மயானத்திற்கு கொண்டு செல்லப்படும் உடல்
மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த்திற்கு கொரோனா தொற்று உள்ளதால் அவரது உடலை நேரடியாக மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகினர், சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கே.வி.ஆனந்த் சென்னை அடையாறில் தன் அம்மா, மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்துவந்தார்.
இதில் அவரது மனைவி மற்றும் மகளுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சைப்பெற்று வந்திருக்கிறார்கள்.
அடுத்ததாக இயக்குநர் கே.வி.ஆனந்துக்குக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. நேற்று இரவு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்திருக்கிறார்.
இயக்குநர் கே.வி. ஆனந்த் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்ட நிலையில் இரண்டாவது டோஸுக்காக காத்திருந்த நிலையில்தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்று அவருக்கு இருந்ததால் அவரது உடல் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படாத நிலையில், நேரடியாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.