கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா - இப்படி ஒரு முறை செய்து பாருங்க
தென்னிந்திய காலை உணவுகளான இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி சாப்பிட்டு சலித்துவிட்டால் இந்த கும்பகோணம் கடப்பா சிறந்த தேர்வாக இருக்கும்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் சமையல் கலைக்கு உலகளவில் ஒரு தனித்தன்மை உண்டு. சுடச்சுட இட்லியுடன் பரிமாறப்படும் "கடப்பா" அங்கே மிகவும் பிரபலமாக உள்ளது. உருளைக்கிழங்கு, பாசிப்பருப்பு மற்றும் தேங்காய் விழுதின் கூட்டணியில் தயாராகும் இந்த உணவின் சுவை, சாம்பார் மற்றும் குருமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சுவையில் இருக்கும். இதை ஒரு முறை சாப்பிட்டால் அதற்கு பிறகு சட்னி, சாம்பாரையே மறந்தும் அளவிற்கு இதன் சுவை தனித்துவமாக இருக்கும்.

தேவையான பொருட்கள் - பாசிப்பருப்பு - 1/2 கப் உருளைக்கிழங்கு - 2 (பெரியது) வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 முதல் 4 இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1/2 டீஸ்பூன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2 பிரிஞ்சி இலை - 1 கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... துருவிய தேங்காய் - 1/2 கப் சோம்பு - 1 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்

கும்பகோணம் கடப்பா செய்ய பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைக்கவும். உருளைக்கிழங்கின் தோலை நீக்கி லேசாக மசிக்கவும். பாசிப்பருப்பையும் லேசாகக் கடையவும். தேங்காய், சோம்பு, கசகசா, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கருவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு குலைய வதக்கிய பிறகு, வேகவைத்த பருப்பு மற்றும் மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லித்தழை, எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும். அவ்வளவு தான் கும்பகோணம் கடப்பா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |