நோயெதிர்பு ஆற்றலை அதிகரிக்கும் கொத்தமல்லி காரகுழம்பு! இவ்வளவு நன்மைகள் இருக்கா?
தென்னிந்திய சமையலில் கொத்தமல்லிக்கு தனி இடம் உண்டு. அதன் மணமும் சுவையும் காரணமாக, பிரியாணி முதல் ரசம் வரை பல்வேறு உணவுகளில் கொத்தமல்லி தவறாமல் இடம்பெறுகிறது.
சுவை மற்றும் நறுமணத்தை மட்டுமல்லாமல், கொத்தமல்லி பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்களுக்காகவும் அறியப்படுகிறது.

கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளிட்ட பல முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீஸ் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகளும் இதில் அதிகமாக காணப்படுகின்றன.
தினசரி உணவில் கொத்தமல்லியை சேர்த்துக்கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல், இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சினைகளையும் குறைக்க உதவுகிறது.

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கொத்தமல்லியை வழக்கம்போல் சட்னியாக மட்டும் பயன்படுத்தாமல், இந்த முறை சுவையான காரக் குழம்பாக செய்து சுவைத்துப் பாருங்கள். வீட்டிலுள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி இலை -1 கப்
புளி - சிறிதளவு
சாம்பார் பொடி -1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் -¼ தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் -10
பூண்டு பல் -10
வெல்லம் - ¼ தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
[RVMHY ]
தாளிக்க தேவையானவை
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - ½ தே.கரண்டி
வெந்தயம் - ¼ தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
துவரம் பருப்பு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் புளியை சூடான நீரில் சுமார் 20 நிமிடங்கள் ஊறவைத்து, நன்கு பிசைந்து வடிகட்டி புளிச்சாறாக தனியாக எடுத்துவைக்க வேண்டும்.
அடுத்து சின்ன வெங்காயம் மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கி ஒரு தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கொத்தமல்லி இலைகளை மிக்சி ஜாரில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிருதுவாக அரைத்துத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகை சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு நன்கு பொரிந்த பிறகு வெந்தயம், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து மிதமான தீயில் சுமார் 2 நிமிடங்கள் வதக்க வேண்டும். பூண்டின் நறுமணம் வெளிப்படத் தொடங்கியதும், புளிச்சாறு, சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் அரைத்த கொத்தமல்லி விழுதை சேர்த்து நன்றாகக் கலந்துக்கொள்ள வேண்டும்.

அதனைத் தொடர்ந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்கவிட வேண்டும்.
குழம்பு நன்கு சுண்டி கெட்டியான பதத்திற்கு வந்ததும் வெல்லத்தைச் சேர்த்து கலக்கி அடுப்பிலிருந்து இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கொத்தமல்லி காரக்குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |