கொங்கு நாட்டு ஸ்டைல் புளி வடை எப்படி செய்யணும் தெரியுமா? இந்த பொருள் அவசியம்
கொங்கு நாட்டு ரெசிபிகளில் பிரபலமானது புளி வடை தான்.
தென்னிந்திய வகை உணவுகளில் எவ்வளவு வடை இருந்தாலும் புளி வடை சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
மாலை வேளைகளில் டீ அல்லது காபியுடன் தொட்டு சாப்பிடலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பூரி போல உப்பி வரக்கூடிய இந்த புளி வடை ரெசிபியை எளிமையாக செய்யலாம்.
அந்த வகையில், புளி வடையை எப்படி இலகுவாக செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி – ஒரு கப்
- துவரம் பருப்பு – கால் கப்
- வரமிளகாய் – 3
- கருவேப்பிலை – ஒரு கொத்து
- சீரகம் – ஒரு டீஸ்பூன்
- துருவிய தேங்காய் – அரை கப்
- சின்ன வெங்காயம் – 10
- பூண்டு – மூன்று
- பல் உப்பு – தேவையான அளவு
- பெருங்காயம் – 1/4 ஸ்பூன்
- புளி – நெல்லிக்காய் அளவு
- மல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு
புளி வடை எப்படி செய்யலாம்?
முதலில் மேலே கொடுக்கபட்டிருக்கும் பொருட்களை தேவையான அளவில் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி, துவரம் பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி, தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து, புளி எடுத்து அதனை ஒரு அளவான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அரிசி, பருப்பு இரண்டு நன்றாக ஊறியதும் அதனை மிக்ஸியில் போட்டு மா பதத்திற்கு அரைத்து கொள்ளவும். அதே மிக்ஸி ஜாரில் வர மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் ஆகிய மூன்றையும் மைப்போன்று அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், பூண்டு உப்பு ஆகிய பொருட்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய மல்லித்தழை, பெருங்காயத்தூள், ஊற வைத்திருக்கும் புளி ஆகியவற்றை நன்றாக அரைக்கவும்.
அரைத்து தனியாக வைத்திருக்கும் வடை மாவுடன் விழுதையும் கலந்து விட்டு, சூடாக இருக்கும் எண்ணெய் பொரித்து எடுக்க வேண்டும். பாதி பொரிந்து வரும் பொழுது பூரி போல உப்பி வரும். அப்போது சரியான பதம் வந்ததும் எடுத்தால் காரசாரமான புளி வடை தயார்! இந்த அருமையான புளி வடையுடன் தொட்டுக்க தேங்காய் சட்னி இருந்தால் சுவை அல்டிமேட்டாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |