புரதச்சத்துக்களை அள்ளி வழங்கும் கொள்ளு வடை! எப்போதும் சாப்பிடலாம்
நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு சத்துக்களும் நன்மைகளும் உள்ளது. அதிலும் தானிய வகைகளில் சொல்லவே தேவையில்லை அவ்வளவு நன்மைகள் இருக்கின்றது.
அவற்றில் கொள்ளு தனி இடம் பெறும். தினமும் கொள்ளு எடுத்துக் கொள்வதால் சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றி விடும்.
உடல் எடையையும் குறைத்து விடும். மேலும், பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளி கொடுக்கும் கொள்ளில் வடை செய்து சாப்பிட்டால் இன்னும் ஆரோக்கியமாகவும் மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நேக்ஸ் ஆகவும் இருக்கும்.
இப்போது கொள்ளு வடையை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முளைகட்டிய கொள்ளு - 1 கப்
பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - 4
சோம்பு-1/2 ஸ்பூன்
இஞ்சி-1/4 இன்ச்
கறிவேப்பிலை -1 கொத்து
மல்லித்தழை - கையளவு
பெருங்காயத் தூள்- 1 சிட்டிகை
சமையல் சோடா - 1 சிட்டிகை
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், மல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் முளைகட்டிய கொள்ளு பருப்பை சேர்த்து வெறும் கடாயில் நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பௌலில் போட்டு தண்ணீர் ஊற்றி சுமார் 8 மணி நேரம் வரை ஊற வைத்து அரைத்து சிறிது தண்ணீர் தெளித்து உப்பு, பெருங்காயத்தூள், சமையல் சோடா ஆகியவை சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அரைத்த மாவினில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி,கறிவேப்பிலை,மல்லித்தழை, மற்றும் சோம்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் சூடான பின் அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து மாவை வடை போன்று தட்டி ஒரு பக்கம் சிவந்த பின்னர் மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் ஆரோக்கியம் நிறைந்த கொள்ளு வடை தயார்.