PCOD பிரச்சனைக்கு முடிவுக்கட்டும் கொள்ளு ரசம்.. காரசாரமாக செய்வது எப்படி?
வீடுகளில் ரசம் பிரியர்கள் இல்லாமல் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு என்ன தான் வகை வகையாக சாப்பாடு இருந்தாலும், கொஞ்சம் ரசம் குடித்தால் மன நிறைவாக இருக்கும்.
எப்போதும் ஒரே மாதிரி ரசம் வைக்காமல் வீட்டிலுள்ள மற்ற பொருட்களை கொண்டு வித்தியாசமாக செய்து கொடுத்தால் மற்றவர்களும் ரசம் பிரியர்களாக மாறுவார்கள். அப்படியாயின், செரிமான பிரச்சினைக்கு நிவாரணம் கொடுக்கும் கொள்ளை வைத்து ரசம் செய்யலாம்.
இது முன்னோர்கள் ரெசிபி என்பதால் பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும் கொள்ளு ரசம் குடிக்கலாம். ஒரு வாரத்தில் நல்ல மாற்றத்தை கொள்ளு கொண்டு வரும்.
அதே போன்று PCOD போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கும் கொள்ளு ரசத்தை குடிப்பதால் நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அந்த வகையில், ஏகப்பட்ட நோய்களுக்கு மருந்தாக மாறும் கொள்ளுவை வைத்து எப்படி ரசம் தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- கொள்ளு - 1/2 கப்
- தக்காளி - 2
- தண்ணீர் - 1 1/2 கப் + தேவையான அளவு
- புளி - எலுமிச்சை அளவு
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 2
- வரமிளகாய் - 1
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - சுவைக்கேற்ப
- கொத்தமல்லி - சிறிது
- சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
- கட்டி பெருங்காயம் - சிறிது
- பூண்டு 3 பல்
கொள்ளு ரசம் எப்படி இலகுவாக வைக்கலாம்?
முதலில் பவுல் ஒன்றில் கொள்ளு பருப்பை போட்டு நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். அதன் பின்னர் குக்கர் அல்லது கடாயை அடுப்பில் வைத்து நீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதனுடன் கொள்ளு பருப்பை போட்டு, தக்காளி இரண்டையும் நன்றாக வேக வைக்கவும்.

கொள்ளு மற்றும் நீரை இரண்டையும் தனியாக வடிக்கட்டி, அந்த நீரில் 1 எலுமிச்சை அளவு புளி சேர்த்து மீண்டும் 15 நிமிடம் ஊற வைக்கவும்.
அடுத்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனை ரசத்தில் ஊற்றி, புளி நீரையும் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக மிளகு, சீரகம், கட்டிப் பெருங்காயம் மற்றும் பூண்டு பற்கள் ஆகியவற்றை உரலில் நன்றாக இடிக்கவும். ரசம் கொதிக்கும் சமயத்தில் இதனை போட்டு, கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் காரசாரமான கொள்ளு ரசம் தயார்!
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |