கேரளா பாணியில் இறால் சட்டிச்சோறு - பண்ணலாமா?
Kerala Style Prawn Satti Soru : பொதுவாகவே வித்தியாசமான முறையில் சுவையாக சமைத்து சாப்பிடுவது அனைவருக்குமே பிடித்த விடயமாக தான் இருக்கும். ஆனால் வேளையை எளிமையாக முடித்துக்கொள்வதற்காக பெரும்பாலும் ஒரே முறையில் சமைத்து சாப்பிடுவது வழக்கம்.
அப்படி தினமும் ஒரே மாதிரியான உணவு வகைகளைச் சாப்பிட்டு சலிப்படைந்துவிட்டீர்களா? குறிப்பாக இறாலை வாங்கும்போதெல்லாம் வழக்கமான வறுவல், குழம்பு அல்லது கிரேவி மட்டுமே செய்து வருகிறீர்களா?

அப்படியானால், இந்த முறை சற்று வித்தியாசமாகவும் அதிக சுவையுடனும் இருக்கும் இறால் சட்டிச்சோறை முயற்சி செய்து பாருங்கள்.
கேரளாவில் பிரபலமான இந்த உணவு வகை, இறாலின் சுவையுடன் மசாலாப் பொருட்களும் தேங்காய் எண்ணெயின் மணமும் கலந்து தனித்துவமான மற்றும் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுக்கும்.

விடுமுறை நாட்களில் அதிக நேரம் செலவிடாமல் சுவையான மதிய உணவைத் தயாரிக்க விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ருசியான இறால் சட்டிச்சோறை வீட்டிலேயே எப்படிச் எளிமையாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இறாலை ஊற வைக்க தேவையானவை
இறால் – 300 கிராம்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்

தாளித்து சாதத்துடன் சேர்க்க தேவையானவை
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 10 பல் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
வடித்த பாசுமதி அரிசி சாதம்
வெள்ளை மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
ஊறவைத்து வறுத்த இறால்

செய்முறை
முதலில் இறாலை நன்றாகச் சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கறிவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, இவை அனைத்தும் இறாலில் நன்றாகப் படும்படி கலந்து, சுமார் 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் தீயை மிதமாகக் குறைத்து, ஊற வைத்துள்ள இறாலைச் சேர்க்கவும்.இறால் நன்றாக வெந்து லேசாக வறுபட்டதும், அதைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதே பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயில் கடுகு சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு தூவி, வெங்காயம் நன்றாக வதங்கி மென்மையாகும் வரை கிளறிவிட வேண்டும்.
அதனையடுத்து ஏற்கெனவே வறுத்து வைத்துள்ள இறாலை வாணலியில் சேர்க்கவும். அதனுடன் உதிரி உதிரியாக வடித்து வைத்துள்ள பாசுமதி சாதத்தையும் சேர்த்து, பின்னர் வெள்ளை மிளகுத் தூளைத் தூவி, அனைத்துப் பொருட்களும் ஒன்றாகக் கலக்கும்படி நன்றாகக் கிளறிவிட வேண்டும்.
அடுப்பை அதிகத் தீயில் வைத்து சுமார் 2 நிமிடங்கள் சாதத்தையும் இறாலையும் நன்றாகக் கிளறிவிட்டு இறக்கினால் அவ்வளவுதான், கேரளா பாணியில் அசத்தல் இறால் சட்டிச்சோறு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |