ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த மாணவி! மாநிலம் முழுவதும் அதிரடி நடவடிக்கை!
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு அருகே செருவத்தூரில் உள்ள உணவகத்தில் கடந்த நாட்களுக்கு முன்பு, 17 வயது சிறுமி ஒருவர் உணவான ஷவர்மாவை சாப்பிட்டுள்ளார்.
ஆனால், ஷவர்மா சாப்பிட்ட மாணவி தேவானந்தாவுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை போன்று அந்த கடையில் ஷவர்மா சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதன் பின்னர், அனைவரும் கசரக்கோடு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாணவி தேவானந்தா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து கடை ஊழியர்கள் கைது செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடையின் உரிமையாளர் முகமது தற்போது மத்திய கிழக்கு நாட்டில் உள்ளார்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து முகமதுவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், ஷவர்மாவை தயாரித்த நேபாளத்தை சேர்ந்த நந்தேஷ் ராய் மற்றும் கடையை நிர்வகித்து வந்த அனாஸ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடைகள் மூடல்
இந்நிலையில், மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உணவுக்கடைகள், குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேப்போல், கசரக்கோடு மாவட்டம் முழுவதிலும் உள்ள ஷவர்மா கடைகளை உடனடியாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.