கேரளா ஹோட்டல் அதிபர் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைப்பு: சென்னை தப்பிய காதல் ஜோடி கைது
கேரளாவில் ஓட்டல் அதிபரை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து வீசிய சம்பவத்தில் சந்தேகத்திற்கிடமான காதல் ஜோடி ஒன்றை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பொலிஸார் கைது செய்தனர்.
கேரளா ஹோட்டல் அதிபர் கொலை
கேரள மாநிலம் மலப்புரம் திரூர் பகுதியை சேர்ந்த சித்திக்(58) என்ற நபர் கோழிக்கோடு பகுதியில் ஓட்டல் ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார்.
இவர் சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் அவரது உறவினர்கள் திரூர் காவல் நிலையத்தில் சித்திக்-கை காணவில்லை என்று புகார் அளித்தனர்.
இதையடுத்து கேரளாவின் பாலக்காடு பகுதியில் சந்தேகப்படும் படி சூட்கேஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதில் கை,கால் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட 50 வயது மதிக்கதக்க மனித உடல் இருந்தது, பின் அதனை திரூரில் காணாமல் போன சித்திக் தான் என்பதை பொலிஸார் உறுதி செய்தனர்.
சித்திக் காணாமல் போன அதே நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து இருமுறை 2 லட்சம் ரூபாய் ஏடிஎம் வழியாக எடுக்கப்பட்டு இருப்பதையும், அதை 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் எடுத்து செல்வதையும் பொலிஸார் தங்களது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடித்தனர்.
அப்போது தான் சித்திக்-கின் ஓட்டலில் 15 நாட்களுக்கு முன்பு சிபில் என்ற இளைஞர் பணிக்கு சேர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது.
மடக்கி பிடித்த பொலிஸார்
சிபிலின் தொலைபேசி அழைப்புகளை உற்றுநோக்கிய பொலிஸார், அவர் ஃபர்கானா என்ற பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் இருவரது புகைப்படத்தையும் திரூர் பொலிஸார் அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்து தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தனர்.
இந்நிலையில் சிபில் மற்றும் ஃபர்கானா ஆகிய இருவரும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூருவில் இருந்து அசாம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்காக காத்து இருந்த நிலையில், அவர்களை ரயில்வே பொலிஸார் மடக்கி பிடித்தனர்.
ஆனால் இருவரும் சித்திக் கொலை வழக்குக்காக பிடிக்கப்பட்டு இருப்பதாக பொலிஸார்கள் அவர்களிடம் தெரிவிக்க வில்லை, மாறாக இளம் வயதில் காதல் காரணமாக வீட்டை விட்டு ஓடி வந்து விட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது அதனடிப்படையில் தடுத்து வைத்து இருப்பதாக சிபில் மற்றும் ஃபர்கானா ஜோடிக்கு பொலிஸார் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து இன்று காலை சென்னை எழும்பூர் ரயில் நிலைய பொலிஸார் கேரளா திரூர் பொலிஸாரிடம் இருவரையும் ஒப்படைத்தனர், அவர்கள் சித்திக் கொலை வழக்கு தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்துவார்கள் என்று எழும்பூர் ரயில் நிலைய பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.