திருமணமான ஒரே வருடத்தில் உயிரிழந்த இளம்பெண்... வரதட்சணை கேட்டு ஆணியால் குத்தி கொடுமை
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் 24 வயது ஆயுர்வேத மருத்துவம் படித்து வந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் விஸ்மயா வி நாயர்(24).இவர் ஆயுர்வேத மருத்துவத்தில் இறுதி ஆண்டு படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மோட்டார் வாகனத்துறையில் அதிகாரியாக பணியாற்றிய கிரண் குமார் என்பவரை மேட்ரிமோனி மூலம் மாப்பிள்ளை பார்த்து குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
விஸ்மயாவிற்கு வரதட்சணையாக 100 பவுன் நகை, 1 ஏக்கர் நிலம், 1 டொயோட்டா கார் ஆகியவற்றை பெற்றோர் கொடுத்துள்ளனர். சில நாட்கள் மட்டுமே மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் வரதட்சணை கொடுமை ஆரம்பித்துள்ளது.
ஆரம்பத்தில் கொடுமைகளை சகித்து வந்த விஸ்மயா, நாட்கள் செல்ல செல்ல கணவர் கடைகளை கொண்டு தாக்கியும், ஆணிகளை வைத்து முகத்தில் குத்தியும் கொடுமை செய்ததையும் சகித்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் விஸ்மயாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற போதும், அங்கும் கிரண் குடித்துவிட்டு அடித்துள்ளார். இதனால் பொலிசாரிடம் புகார் அளித்து கிரண் கைது செய்யப்பட்டு, பின்பு சமாதானம் செய்து கிரண் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் கணவனுடன் வாழ விருப்பம் இன்றி விஸ்மயா பிறந்த வீட்டிலேயே தங்கிய நிலையில், தேர்வு எழுத கல்லூரிக்கு சென்ற போது, கிரண் நேராக கல்லூரிக்கு சென்று விஸ்மயாவை பிக் அப் செய்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
முதல் ஒரு வாரம் அமைதியாக இருந்த கிரண் மீண்டும் குடித்துவிட்டு விஸ்மயாவை மோசமாக தாக்கி, அடித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் திருமண உறவு முறிய கூடாது என்ற அச்சத்திலும் பெற்றோரின் குடும்ப கவுரவத்தை எண்ணியும் அப்பா, தம்பியிடம் சொல்லாமல் விஸ்மயா அமைதியாக இருந்துள்ளார்.
தனது சித்தப்பா மகனிடம் மட்டும் விஸ்மயா தனக்கு நடக்கும் கொடூரங்களை சொல்லி இருக்கிறார். எண்டே மொகத்தில் சவட்டி.. ஒத்திரி அடிச்சு (என் முகத்தில் உதைக்கிறார்.. அதிகமாக அடிச்சிட்டார்) என்று சித்தப்பா மகனிடம் மெசேஜ் அனுப்பி விஸ்மயா வருந்தி இருக்கிறார்.
தன்னை மோசமாக தாக்கிய புகைப்படங்களையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விஸ்மயா வாட்ஸ் ஆப்பில் அனுப்பி உள்ளார். இந்த நிலையில்தான் நேற்று அதிகாலை விஸ்மயா மர்மமான முறையில் கிரண் வீட்டில் இறந்து கிடந்தார்.
இது குறித்து விஸ்மயாவின் அப்பா திரிவிக்ரமன் தனது மகளை கிரண் தான் கொடுமைப்படுத்தி கொன்றதாக பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
உடலில் மோசமான காயங்களுக்கான அடையாளங்கள் இருப்பதால் கண்டிப்பாக இது கொலைதான் என்று பொலிசாரும் சந்தேகித்து, வரதட்சணை கொடுமை கொலையாக பதிவு செயதுள்ளனர். ஆனால் விஸ்மயாவின் பிரேத பரிசோதனையில் தூக்கில் தொங்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிரண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், விஸ்மயாவின் வாட்ஸ் ஆப் மெசேஜ்கள் வெளியாகி நாட்டையே உலுக்கி உள்ளது. கிரண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கண்டன குரல்கள் வலுத்து வருகிறது.
தனக்கு வரதட்சணையாக தரப்பட்ட காரின் மைலேஜ் சரியில்லை என்று சொல்லி, அதற்கு பதிலாக பணம் கேட்டதாகவும், அதனாலேயே மனைவியிடம் தகராறு வந்ததாகவும் கிரண் குமார் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
மேலும் 2 நாட்களுக்கு முன்பு சண்டை நடந்தது உண்மை என்றும் அவரை அடித்ததாக கூறப்படும் காயங்கள் கொண்ட புகைப்படம் பொய் என்றும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கிரண்குமார் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் படுத்திய நிலையில், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கிரண் குமார் மீது குடும்ப வன்முறை மற்றும் வரதட்சனை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரதட்சணை கொடுக்க மாட்டோம் என தங்கள் வீடுகளில் துண்டு பிரசுரம் ஒட்டி தங்கள் எதிர்ப்பை கேரள பெண்கள் முன்னெடுத்துள்ளனர்.