இடுக்கில் சிக்கிய இளைஞரை காப்பாற்ற செய்த செலவு மட்டுமே இத்தனை லட்சமா? கேரள வனத்துறை வழக்கு பதிவு!
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் பாபு (28) தனது நண்பர்களுடன் சேர்ந்து மலம்புழையில் உள்ள குரும்பச்சி மலையில் ஏறியபோது, கால் தவறி பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் விழுந்தார்.
அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதனையடுத்து 2 நாட்கள் போராட்டத்திற்கு பின்பு அவரை இராணுவம் பத்திரமாக மீட்டது.
இந்த நிலையில், மலை இடுக்கில் சிக்கிய பாபுவை மீட்பதற்காக கேரள அரசு செலவிட்ட தொகை குறித்த தகவல்கள் வெளியாகின.
அதன்படி, மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணி நேர வாடகை மட்டும் 2 லட்சம் ரூபாய் ஆகுமாம்.
7 ஆம் தேதி மாலை முதல் 9 ஆம் தேதி காலை வரையிலான வாடகை மட்டும் 50 லட்சம் ரூபாய் வரை ஆகியுள்ளது.
இதைத்தவிர பணிக்குழுக்களுக்கு செலவான தொகை 15 லட்சம் ரூபாய் ஆகும். இன்னும் சில செலவுகளுக்கான கணக்கு கேரள அரசு கருவூலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதனையும் சேர்த்தால் மொத்த செலவு 75 லட்சம் ரூபாயை தாண்டும் என கூறப்படுகிறது. இதனிடையில், கேரள வனத்துறை தடையை மீறி மலையேற்றம் சென்றதாக வழக்கு பதிவு செய்துள்ளது.
இவரை மட்டுமின்றி இவரின் இரண்டு நண்பர்களின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.