எரிவாயு விலை உயர்வு போராட்டம்.. பற்றி எரியும் கஜகஸ்தான்; விரைந்த ரஷ்யா படை!
எரிபொருள் விலையேற்றத்தால் கஜஸ்தானில் வன்முறை வெடித்துள்ளது. இந்த விலை உயர்வால் பல உயிர்களை பலி கொண்டுள்ளது. மக்களை அடக்க ரஷ்யாவில் இருந்தும் படைகள் விரைந்துள்ளன.
கஜகஸ்தானில் கடந்த சில நாட்களாக எல்.பி.ஜி விலையை அரசு அதிரடியாக அதிகரித்ததால் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்பு வன்முறையாக உருவெடுத்துள்ளது.
அதில், அல்மாட்டி நகரத்தில் கலவரம் உச்சத்தில் உள்ளது. அங்கு, காவல் நிலையங்களை போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றதை அடுத்து பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்ததில் பல போராட்டக்காரர்கள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
இதில், மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியதில் ஏற்பட்ட கலவரத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர், 353 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனிடையில், கஜகஸ்தான் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷ்யா தனது படைகளை அனுப்புகிறது. Collective Security Treaty Organization என்ற அமைப்பில் உறுப்பினராக உள்ள நாட்டில் அமைதியை திரும்பக் கொண்டுவதற்காக ரஷ்யா படைகளை அனுப்புவதாக கூறப்படுகிறது.
ரஷ்யா, பெலாரூஸ், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், ஆர்மீனியா ஆகியவற்றுடன் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு இதுவாகும். CSTO-வின் அமைதி காக்கும் படையினராக ரஷ்யா தனது படையினரை அனுப்புகிறது.
ஆனாலும், இந்த பிரச்சனையின் பின்னணியில் "பயங்கரவாத கும்பல்," இருப்பதாக கஜகஸ்தான் அதிபர் கஸ்யம் ஜோமார்ட் டோகாயேவ் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து, கடுமையான முறையில் எதிர்ப்பாளர்கள் அடக்கப்படுவார்கள் என்று எச்சரித்த அதிபர், நாடு தழுவிய அவசரகால நிலையை அமல்படுத்தியுள்ளார்.
எனவே, நாடு முழுவதும் ஊரடங்கு மற்றும் கூட்டங்களுக்குத் தடை போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளன.