முடிவுக்கு வரும் கயல் சீரியல் - கிளைமாக்ஸிலும் சஞ்சீவ் இல்லையா? ரசிகர்கள் அதிர்ச்சி!
சன் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக ஒளிபரப்பாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ‘கயல்’ சீரியல் விரைவில் நிறைவுக்கு வர இருக்கிறது.
டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தைப் பிடித்து வந்த இந்தத் தொடர், சமீபகாலமாகக் கதையின் போக்கு காரணமாக ரசிகர்களின் விமர்சனங்களையும் சந்தித்து வந்தது.

திடீரென விலகிய ஹீரோ சஞ்சீவ்
இந்தத் தொடரில் ஹீரோ எழிலாக நடித்து வந்த சஞ்சீவ் திடீரென விலகியது கதையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
அவர் இல்லாமலேயே கதையைத் தொடர்ந்து நகர்த்த வேண்டிய சூழலில், இயக்குநர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையில், சீரியல் குழுவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே சஞ்சீவ் நடிப்பிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

அவர் தொடரில் இல்லாத நிலையில், கதையிலும் எழில் கோமாவில் இருப்பதுபோலக் காட்டப்பட்டு வருகிறது. இதனால், எழில் மீண்டும் திரையில் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வந்தது.
அக்டோபர் 24-ல் கிளைமாக்ஸ்... சஞ்சீவ் வருவாரா?
இந்நிலையில், வரும் அக்டோபர் 24ஆம் தேதி ‘கயல்’ சீரியலின் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நீண்ட காலமாகத் தொடரைப் பார்த்து வந்த ரசிகர்கள் இறுதிக்கட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

மேலும், சீரியலின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
அந்தப் புகைப்படத்தில் தொடரின் பல நடிகர்கள் இடம்பெற்றிருந்தாலும், ஹீரோ எழிலாக நடித்த சஞ்சீவ் மட்டும் இடம்பெறவில்லை.
இதனால், இறுதிப் பகுதியிலாவது சஞ்சீவ் திரும்பி வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. கிளைமாக்ஸில் அவர் இடம்பெறுவாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |