பாவங்களை போக்கும் பரணி தீபநாள்; திருவண்ணாமலையின் மகாதீபம் நேரலை!
தமிழகம் முழுவதுமே கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. இந்த கார்த்திகை தீப நாளில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை மட்டுமின்றி வீடுகள்தோறும் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். மேலும், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், மகா தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக்கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என ஐந்து நாட்கள் தீபங்கள் ஏற்றப்படும்.
இந்த தீப நாட்களில் முதல் நாளில் பரணி தீபம் ஏற்றுவார்கள். பரணி காளிக்குரிய நாளாகும். ஆதிநாளில் காளிதேவியை வழிபடும் நோக்கத்தில் பரணி தீபத்தைக் கொண்டாடினார்கள்.
இது, சிவபெருமானை குறித்து கொண்டாடும் விழாவாகும். இதை அண்ணாமலையார் தீபம் என்று அழைக்கின்றனர். இதன்பின்னர், அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக இவை காட்டப்படும்.
இதனையடுத்து,படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற சிவனின் ஐந்து அம்சங்களையும் காட்டும் விதமாகவே பரணி தீபம் காட்டப்படுகிறது. அதன் பின்னர், மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
நாம் செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரத்தன்று இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
மண் விளக்குகளை வீட்டின் வாசல் படிகளிலும், உள்ளே உள்ள வாசல்களிலும் படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு. வீட்டில் நல்லெண்ணெயிலும், முருகன் முன்னிலையில் இலுப்பெண்ணெயிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் அஷ்டலட்சுமிகளும் வீட்டில் அடியெடுத்து வைப்பார்கள், ஐஸ்வர்யம் பெருகும்.