எந்த பொண்ணை கட்டலாம்? டாஸ் போட்டு வினோத முடிவு! இறுதியில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த ஷாக்
கர்நாடகாவில் இரண்டு பெண்களை காதலித்த நபர் யாரை திருமணம் செய்வது என டாஸ் போட்டு முடிவு எடுக்கப்பட்டது வைரலாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சக்லேஷ்பூர் என்ற பகுதியை சேர்ந்த இளைஞரை ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் காதலித்தனர்.
ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் அந்த இளைஞரை காதலித்த நிலையில் கடைசியில் இருவரும் இளைஞரை திருமணம் செய்ய ஆசைப்பட்டனர்.
இதனால் இரண்டு பெண்கள் மற்றும் இளைஞர் வீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இளைஞரை இரண்டு பெண்களும் உயிருக்கு உயிராக விரும்புவதால் எந்த பெண்ணுக்கு அவரை திருமணம் செய்து வைப்பது என்ற குழப்பத்தை தீர்க்க பஞ்சாயத்து கூட்டப்பட்டது.
இந்த பஞ்சாயத்தில் முதல் கட்டமாக இரு பெண்களிடம் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்க பஞ்சாயத்தார் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் இரண்டு பெண்களும் பிடிவாதமாக அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்வதில் இருந்ததை அடுத்து வேறு வழியின்றி பஞ்சாயத்தார் டாஸ் போட்டு இரண்டு பெண்களில் ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்தனர்.
இதற்கு அந்த இரண்டு பெண்களும் அவருடைய குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில் டாஸ் போட்டு தேர்வான பெண்ணிற்கு வாழ்த்து தெரிவித்த இன்னொரு பெண் தான் காதலித்த இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு கோபமாக சென்றதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு பெண்ணைத் திருமணத்திற்கு தேர்வு செய்ய இதுவரை கேள்வியே படாத வகையில் டாஸ்போட்டு தேர்வு செய்த செய்தி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.