கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே இந்திய உணவுகளில் லெமன் சாதம் முக்கிய இடம் வகிக்கின்றது. அதன் மணம், சுவை மற்றும் விரைவில் செய்யக்கூடிய தன்மையால் மிகவும் பிரபல்யமான உணவாக இருக்கின்றது.
பெரியவர்களுடன் ஒப்பிடும் பொது சிறியவர்கள் உணவு விடயத்தில் மிக விரைவாகவே சலிப்படைந்து விடுவார்கள்.
எனவே ஒரே விதமான உணவாக இருந்தாலும் வித்தியாசமான முறைகளில் செய்து கொடுப்பது சிறுவர்களுக்கு உணவு மீதான ஆர்வத்தை தூண்டும்.
கர்நாடகாவில் லெமன் சாதம் சித்ரான்னம் என அறியப்படுகின்றது. இந்த பாணியில் அசத்தல் சுவையில் எவ்வாறு லெமன் சாதம் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
சமைத்த சாதம் - 2 கப்
எலுமிச்சைச்சாறு - 4 தே.கரண்டி
கடலை எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - அரை தே.கரண்டி
சீரகம் - அரை தே.கரண்டி
கடலைப்பருப்பு - 1 தே.கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தே.கரண்டி
வேர்க்கடலை - 3 தே.கரண்டி
நறுக்கிய இஞ்சி - 1 தே.கரண்டி
வர மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பெருங்காயம் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 1 கைப்பிடி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு மற்றும் சீரகம் சேத்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து பருப்பு பொன்னிறமாகும் வரையில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நிலக்கடலையைச் சேர்த்து, கருகாமல் சில நொடிகள் வதக்கியபின்னர், பச்சை மிளகாய் ,சிவப்பு மிளகாய் இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு சிட்டிகையளவு பெருங்காயம், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அவை அனைத்தும் நன்றாக வதங்கிய நிலையில், எலுமிச்சை சாறு சேர்த்து, இறுதியில் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து அடுப்பை அணைத்துவிட வேண்டும்.(எலுமிச்சைச்சாறு அதிகம் கொதித்தால் கசப்புத்தன்மை அதிகரிக்கும்)
இறுதியில் சாதத்தை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். பின்னர் மசாலாவின் சுவை சாதத்தில் முழுவதுமாக இறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும். அவ்வளவு தான் அருமையான சுவையில் கர்நாடகா ஸ்பெஷல் சித்திரான்னம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |