தீபாவளி ஸ்பெஷல் நாட்டுக்கோழி குழம்பு... கர்நாடகா ஸ்டைலில் செய்வது எப்படி?
தீபாவளி தினத்தில் நாட்டுக்கோழி குழம்பு கர்நாடகா ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தீபாவளி வந்துவிட்டாலே அனைவருக்கும் காலை உணவு கறிக்குழம்பு, இட்லி என்று தான் இருக்கும். ஆதலால் தீபாவளிக்கு மட்டன், சிக்கன் அதிகமாகவே மக்கள் எடுக்கின்றனர்.
அதிலும் வழக்கமான குழம்பாக செய்யலாம் என்று வித்தியாசமாக நாட்டுக்கோழியும் எடுத்துக் கொள்ளலாம். பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி உடம்பிற்கு அதிக நன்மையை அளிக்கின்றது.
அந்த வகையில் நாட்டுக்கோழியை கர்நாடக ஸ்டைலில் எவ்வாறு குழம்பு வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
மேரினேட் செய்ய
நாட்டுக்கோழி - 500 கிராம்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்
தேவையான அளவு உப்பு
மசாலா அரைக்க
துருவிய தேங்காய் - 1/3 கப்
இஞ்சி - 1 அங்குலத் துண்டு
பூண்டு - 10 பற்கள்
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 8
மல்லி விதைகள் (தனியா) - 1 டீஸ்பூன்
கிராம்பு - 5
பட்டை - 1 இன்ச்
வெந்தயம் - 1/8 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

தாளிக்க
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை
நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு ஊற வைப்பதற்கு கொடுக்கப்பட்ட பொருட்களை சேர்த்து ப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும், இஞ்சி பூண்டு மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய வெங்காயத்தையும் இதனுடன் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.

இதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து அடுப்பினை அணைத்துவிடவும். பின்பு இதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். நன்றாக வதங்கியதும் இதனுடன் ஊற வைத்த சிக்கனை சேர்த்து கிளற வேண்டும்.

சிக்கனில் இருந்து தண்ணீர் பிரிந்து வரும் வரை சுமார் 4 நிமிடங்கள் வதக்கி, பின்னர் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.இதனுடன் அரைத்த விழுதையும், ஒரு கப் தண்ணீரும் சேர்த்து கிளற வேண்டும்.
குக்கரை மூடி 5 விசில் வரும்வரை கொதிக்கவிட வேண்டும். விசில் அடங்கியதும் குழம்பு கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பினை அணைத்துவிட்டு, கடைசியாக கொத்தமல்லி இலையினை தூவி இறக்கினால் கர்நாடகா ஸ்டைல் நாட்டுக்கோழி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |