வாழை இலை மீன்... கேரளா ஸ்டைலில் சுவையாக செய்வது எப்படி?
வாழை இலை மீன் கேரளாவில் மிகவும் பிரபலமான உணவு.
இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மீன் - ½ கிலோ எடையில் 2 (சுத்தம் செய்து உடலில் அங்கங்கே கீறி விட்டு முழுமையாக வைத்துக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயம் - 200 கிராம்
- தக்காளி - 3
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 50 கிராம்
- எலுமிச்சை - 2
- மிளகாய் தூள் - 5 ஸ்பூன்
- மல்லித்தூள் - 3 ஸ்பூன்
- மிளகுத்தூள் - 4 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
- தேங்காய் பால் - ஒரு மூடி வாழை இலை பெரியது - ஒன்று
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் - 150 மில்லி.
செய்முறை
ஒரு தட்டில் கொடுக்கப்பட்டு உள்ள பொடிகளில் மல்லிப் பொடியைத் தவிர மற்ற பொடிகள் எல்லாவற்றிலும் பாதியளவு எடுத்து ஒரு தட்டில் போட்டுக்கொள்ளுங்கள் அதில் இரண்டு எலுமிச்சம் பழங்களையும் வெட்டிப் பிழியுங்கள்.அத்துடன் தேங்காய் எண்ணெய் , உப்பு ,பாதி அளவு இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பிசைந்து மீனின் உடலில் தடவுங்கள்.உள்ளேயும் தடவலாம்.
இந்த மீன்களை ஒரு அரை மணி நேரம் மசாலில் ஊற விடுங்கள். அவை ஊறுகிற நேரத்தில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி,அது சூடானதும்,கறிவேப்பிலை,சின்ன வெங்காயம்,மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து , உப்பு போட்டு வதக்குங்கள்.
எண்ணெய் பிரிந்து வரும்போது வெட்டி வைத்து இருக்கும் தக்காளியை போட்டு தக்காளி நன்றாக சுருண்டு வரும்வரை வதக்கி,அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறிவிட்டு கடாயை இறக்குங்கள்.
அதன் பிறகு , ஒரு பெரிய வாழை இலையை அடுப்பில் வாட்டி இரண்டு துண்டுகளாக வெட்டி வையுங்கள்.
ஒரு தோசைக் கல்லை எடுத்து அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு அது சூடானதும் அதில் மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்து இந்தப்பக்கம் ஒரு நிமிடம் அந்தப்பக்கம் ஒரு நிமிடம் வேகவிட்டு எடுங்கள்.
இப்போது ஒரு வாழை இலைத் துண்டை எடுத்து அதன் நடுவில் கடாயில் இருக்கும் மசாலாவில் ஒரு கரண்டி எடுத்து பரப்புங்கள்.
இப்போது எண்ணெயில் லேசாக வேக வைத்து வைத்திருக்கும் மீனை எடுத்துப் போட்டு அதன் மேலும் மசாலாவை அள்ளி வையுங்கள். மீன் இரண்டுபுரமும் மசாலா இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு அந்த இலையை மடித்து மீன் வெளியே தெரியாதபடி பொதிந்து வாழை நாரால் காட்டுங்கள். இப்படி இன்னொரு மீனையும் கட்டிய பிறகு மறுபடி அந்த தோசைக் கல்லை பற்றவைத்து மொத்த எண்ணெயையும் அதில் ஊற்றி அது நல்ல சூடானதும் மீன் பொதியை தூக்கி வைத்து ஒவ்வொரு புறமும் மூன்று நிமிடம் வேகும்படி புரட்டி போட்டு எடுத்தால் , மீன் பொள்ளிச்சது ரெடி.