தோல்வியை தொடர்ந்து திமுக தலைவரை சந்தித்த கமல்! கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்த எச்சரிக்கை
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
முதல் முறையாக தமிழக முதல் அமைச்சர் பதவியை பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாலினுக்கு திரையுலகினர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.

முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாலினுக்கு அவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சியை சீரமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்றும், அது கடுமையாக இருக்கும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் எச்சரித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக முக்கிய நிர்வாகிகளுடன் கமல் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு வேட்பாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் நடந்த இந்த ஆலோசனையில் கமல்ஹாசன் கட்சியை சீரமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அது கடுமையாக இருக்கும், தேர்தலின் வெற்றி தோல்வி கட்சியின் நோக்கத்தை தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.