ஒரு வருடம் ஆனாலும் நகைகள் புதுசு போல ஜொலிக்கணுமா?
நகைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, தங்கம், வைரம், பிளாட்டினம் என்பதையும் தாண்டி முத்து மணிகள், ஆன்டிக் நகைகள் என பலவற்றை வாங்கி குவிப்பார்கள்.
ஆனால் அவற்றை பராமரிப்பதில் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை.
இதனால் சில மாதங்களில் அல்லது வருடங்களில் பொலிவிழந்து காணப்படலாம், நிறம் மங்கி பித்தளை போன்று காட்சியளிக்கும்.
இந்த பதிவில் நகைகளை புத்தம் புதிது போல பராமரிப்பது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
நகைகளை அணிந்த பின்னர்
நகைகள் அணிந்துவிட்டு கழட்டி வைக்கும் போது வியர்வை, தூசிகளுடன் அப்படியே வைக்காமல் மைல்டான ஷாம்பு அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் மென்மையான ப்ரஷ் கொண்டு தேய்த்து விட்டு. உலர வைத்த பின்னர் நகைப்பெட்டியில் வைக்கவும்.
மறந்தும்கூட கடினமான ப்ரஷ்களை பயன்படுத்த வேண்டாம், ஈரமான நகைகளை துடைக்க மெலிதான காட்டன் துணிகளை பயன்படுத்தவும்.
இதேபோன்று குளிக்கும் முன்னர் நகைகளை கழட்டிவைத்துவிட்டு குளிக்கச்செல்லுங்கள், ஏனெனில் சில நேரங்களில் சோப்பு படிந்துவிட்டு நகைகளை பொலிவிழக்கச் செய்யலாம்.
நகை பெட்டிகளில் கவனம் தேவை
நகைப்பெட்டிகளில் கடினமானதாக இல்லாமல் சாட்டின் துணியால் வடிவமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நகைக்கும் தனித்தனி இடம் இருக்குமாறு பார்த்து வாங்கவும், அனைத்து நகைகளும் ஒன்றாக வைத்தால் முறிந்துவிட வாய்ப்புகள் உண்டு.
ஒவ்வொரு நகைக்கும் தனித்தன்மையும் இருக்கும் என்பதால் தனித்தனியாக வைக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
வாசனை திரவியங்கள்
நகைகளை அணிந்து வெளியே செல்லும் போது வாசனை திரவியங்களை நகைகளின் மீது அடிக்க வேண்டாம்.
உடற்பயிற்சி செய்யும் போது நகைகள் அணிந்திருப்பதை தவிர்க்கவும், வியர்வை வெளியேறுவதால் நகைகள் பொலிவிழக்க வாய்ப்புகள் உண்டு.
வருடத்திற்கு ஒருமுறையாவது நகைகள் ஏதும் சேதமடைந்திருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்வதும் அவசியம்.