ஓட்டல் சுவையில் சீரா ரைஸ்.... யாரெல்லாம் சாப்பிட்டலாம்! உடல் முழுவதும் அதிசயம் நடக்கும்!
தமிழர்களின் உணவுகள் அனைத்திலும் சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
சீரகத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ புரதச்சத்து, நார்ச்சத்து, நிறைவுறு கொழுப்பு போன்றவை மிகுதியான அளவில் உள்ளன. வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வந்தால் முகம், தலைமுடி பொலிவு பெரும்.
மேலும் உடல் ஆரோக்கியமும் மேம்படும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாக அமைகிறது.
இத்தகைய நன்மைகள் கொண்ட சீரகத்தினை வைத்து செய்யப்படும் சீரக சாதம் குறித்து தான் இன்று பார்க்க போகின்றோம்.

சீரக சாதம் செய்யும் முறை
தேவையான பொருட்கள்
- சம்பா பிரியாணி அரிசி – 1
- ஆழாக்கு (சுமார் 200 கிராம்)
- சீரகம் – 1 ஸ்பூன் (10 கிராம் தோராயமாக)
- மிளகு – 10 எண்ணம்
- பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)
- பச்சை மிளகாய் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
- கறிவேப்பிலை – 3 கீற்று
- கொத்தமல்லி இலை – 1 கொத்து
- முந்திரிப் பருப்பு – 5 எண்ணம் (முழு அளவு)
- இஞ்சி – முக்கால் சுண்டுவிரல் அளவு
- வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)
- உப்பு – தேவையான அளவு
- நெய் – 2 ஸ்பூன்
- பட்டை – சுண்டு விரல் அளவு
- பிரிஞ்சி இலை – 1 எண்ணம்
- கிராம்பு – 2 எண்ணம்
- ஏலக்காய் – 2 எண்ணம்
- ஸ்டார் அன்னாசிப்பூ – 1 எண்ணம்

செய்முறை
முதலில் சம்பா பிரியாணி அரிசியை அலசி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை ஊற வைப்பதால் சீக்கிரத்தில் வேகும். பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை அலசி நேராக கீறிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
மல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து உருகியதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, ஸ்டார் அன்னாசிப்பூ, சீரகம், மிளகு, முந்திரிப் பருப்பு சேர்த்து தாளிதம் செய்யவும்.
அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பெரிய வெங்காயம் கண்ணாடிப் பதம் வந்ததும் அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
பின்னர் அதனுடன் 2 ஆழாக்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த சம்பா பிரியாணி அரிசி மற்றும் கொத்தமல்லி இலையைச் சேர்த்து கிளறி மூடி விடவும். குக்கரில் ஒரு விசில் வந்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.
சில நேரங்களில் குக்கரில் விசில் வருவதற்கு முன்பே தண்ணீர் குறைந்து அடி பிடித்து விடும். ஆதலால் குக்கரை மூடியதும் அதன் கைபிடியை கையால் அழுத்திப் பிடித்தால் தண்ணீர் கொதிப்பதை உணரலாம்.
3 நிமிட இடைவெளியில் மீண்டும் சோதித்துப் பார்க்கும்போது தண்ணீர் கொதிப்பது நின்றிருப்பதாக உணர்ந்தால் அடுப்பினை அணைத்து விடலாம்.
குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து சாதத்தை ஒருசேரக் கிளறி மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
சுவையான சீரக சாதம் தயார்.