விஜயை பெருமையாகப் பேசிய மகன் ஜேசன் சஞ்சய் - வைரலாகும் பேட்டி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல ஆண்டுகள் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த விஜய், தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். அரசியலில் முழு கவனம் செலுத்தி வரும் அவரின் குடும்பத்தினரும் அவ்வப்போது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், நடிகராக அல்லாமல் இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவரது இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஜேசன் சஞ்சய் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.
அப்பாதான் என் முதல் தேர்வு
அவ்வகையில், ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் சுவாரஸ்யமான கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது. அதில், "உங்கள் பெயரைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், 'சிக்மா' படத்தைப் பார்த்துவிட்டு, 'தம்பி, வாங்க... ஹாலிவுட்டில் ஒரு படம் பண்ணலாம்' என்று அழைத்தால், இந்தியாவில் இருந்து எந்த நடிகரை அவருடன் இணைத்து அழைத்துச் செல்வீர்கள்?" என்று கேட்கப்பட்டது.

இதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த ஜேசன் சஞ்சய், "எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அப்பாதான் (விஜய்). அவர்கள் இருவரும் இணைந்தால் அது மிகச் சிறப்பான கூட்டணியாக இருக்கும். நான் இப்போது சொன்ன இந்தப் பதிலை நடிகர் ஜேசன் ஸ்டேதம் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்," என்று சிரித்தபடியே தெரிவித்தார்.
அதே பேட்டியில், தனது சிறுவயது நினைவுகளையும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் சென்னை நகரில் நடைபெற்றபோது, தனது தந்தை விஜய்யின் தோளில் அமர்ந்தபடி போட்டியை ரசித்த அனுபவம் இன்னும் மறக்க முடியாத நினைவாக இருப்பதாக கூறினார்.

தனது குழந்தைப் பருவ அனுபவங்களையும், தந்தையுடனான பாசப்பிணைப்பையும் அவர் அப்போது மனம் திறந்து பகிர்ந்துகொண்டார். தனது தந்தை விஜய் பற்றி ஜேசன் சஞ்சய் பெருமையாக கூறியவை சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகின்றது.
விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்ததையடுத்து விஜய்க்கும் அவரின் பிள்ளைகளுக்கும் இடையே உறவு கசப்பாக மாறியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஜேசன் சஞ்சய் இவ்வாறு பேசியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |