எனது பெயரைப் பயன்படுத்தி மோசடி - ஜேசன் சஞ்சய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள அவர், எதிர்காலத்தில் கதாநாயகனாகவும் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனால், அவர் தொடர்பான செய்திகள் மற்றும் அவரது திரைப்பயணம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்குகள் தொடர்பாக ஜேசன் சஞ்சய் முக்கியமான ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜேசன் சஞ்சய் அறிவிப்பு
குறிப்பாக, தனது பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி பல்வேறு போலியான சமூக வலைதளக் கணக்குகள் மற்றும் பக்கங்கள் செயல்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அவற்றுக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

போலி கணக்குகளின் செயல்பாடுகளுக்கு நான் பொறுப்பல்ல! இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னால் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்பட்டுள்ள சமூக வலைதளக் கணக்குகளைத் தவிர, தனது பெயர், புகைப்படம் அல்லது தனிப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்திச் செயல்படும் ஏனைய அனைத்து கணக்குகளும் பக்கங்களும் போலியானவை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அத்தகைய கணக்குகள் மூலம் வெளியிடப்படும் பதிவுகள், பகிரப்படும் கருத்துகள், அனுப்பப்படும் நேரடிச் செய்திகள் மற்றும் மேற்கொள்ளப்படும் வணிக ரீதியான தொடர்புகள் என எதற்கும் தான் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், தனது பெயரில் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் கணக்குகள் மற்றும் பக்கங்களும் போலியானவை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனவே, ரசிகர்களும் பொதுமக்களும் சமூக வலைதளங்களில் தனது பெயரில் செயல்படும் போலியான கணக்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள கணக்குகளை மட்டுமே பின்தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |