இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா
மறைந்த பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் இறுதிச் சடங்கின் போது அவரது பேத்தி அப்சரா வைத்யுலா கண்ணீர் சிந்தாமல் இருந்ததாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர்.
"பாட்டி இறந்து கிடக்கிறார்... ஆனால் அப்சராவுக்கு கண்ணீரே வரவில்லையே" என்ற வகையில் பல கருத்துகள் பதிவான நிலையில், அந்த விமர்சனங்களுக்கு தற்போது அப்சரா மனம் திறந்து விளக்கம் அளித்துள்ளார்.

ஜானகி பேத்தியின் உருக்கமான பதிவு
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அப்சரா கூறியிருப்பதாவது: "இந்த உலகிலேயே என் பாட்டிக்கு மிகவும் பிடித்த நபர் என் அக்கா வர்ஷாதான். அவர்கள் இருவரும் பல விஷயங்களில் ஒரே மாதிரியானவர்கள்.அவர்களுக்குள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு ஆழமான புரிதலும் பாசமும் இருந்தது.
இன்று என் பாட்டிக்கு இறுதிச் சடங்கு செய்யும் நேரத்தில், உண்மையில் என் இடத்தில் இருக்க வேண்டியது என் அக்கா வர்ஷாதான் என்பதை இந்த உலகம் மறந்துவிடக் கூடாது. ஆனால், என் அக்கா 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எங்களை விட்டு பிரிந்துவிட்டார்.

அந்த இழப்பிலிருந்து எங்கள் குடும்பம் இன்னும் மீளவில்லை. சில வலிகள் காலம் கடந்தாலும் மறைவதில்லை; அவை வாழ்நாள் முழுவதும் நம்முடனேயே இருக்கும். என் அக்காவும், என் பாட்டியும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்ற எண்ணமே எனக்கு இப்போது இருக்கும் ஒரே ஆறுதலாக இருக்கிறது.
கடந்த சில நாட்களாக, 'உங்கள் கண்களில் கண்ணீர் வரவில்லையே' என்று பலரும் என் துக்கத்தைப் பற்றி கேட்டு வருகிறார்கள். ஒருவர் வெளிப்படுத்தும் கண்ணீரை வைத்து அவரது அன்பையோ, துக்கத்தையோ அளவிட முடியாது.

நீங்கள் பார்த்த கண்ணீரையோ, பார்க்காத கண்ணீரையோ வைத்து என் பாட்டியின் மீது நான் வைத்திருந்த அன்பை தயவுசெய்து மதிப்பிட வேண்டாம். மரணம் பற்றிய உண்மையான புரிதலை எங்களுக்கு கற்றுக் கொடுத்ததே என் பாட்டிதான்.
ஒரு மனிதரின் வாழ்க்கை முடிவடையலாம்; ஆனால் அவர் மீது வைத்திருக்கும் அன்பு ஒருபோதும் முடிவதில்லை என்பதை அவர் எங்களுக்கு உணர்த்தியிருக்கிறார்" என்று அப்சரா தனது பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |