சத்தான காலை உணவு! தேங்காய் தோசையும், முருங்கைக்கீரை சட்னி....
Coconut Dosa with Drumstick Leaves Chutney: சத்தான காலை உணவு தேங்காய் தோசை மற்றும் முருங்கைக்கீரை சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் தான் அன்றைய நாளின் நமது செயல்பாடுகளை தீர்மானிக்கின்றது. ஆம் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு புரதச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும்.
அவ்வாறு உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பொருளான தேங்காய் மற்றும் முருங்கைக்கீரை இவற்றினை வைத்து காலை உணவு தயாரிக்கலாம். தேங்காய் தோசையும், முருங்கைக்கீரை சட்னியும் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
சட்னிக்கு
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எள்ளு - 1 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 25 கிராம்
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
பூண்டு - 20 பல்
முருங்கைக்கீரை - 1 கட்டு
உப்பு - சுவைக்கேற்ப
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
புளி - 15 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு
நெய் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

தோசைக்கு
புழுங்கல் அரிசி - 200-250 கிராம் (4 மணிநேரம் ஊற வைத்தது)
சாதம் - 75 கிராம்
துருவிய தேங்காய் - 75 கிராம்
இளநீர் - 1
உப்பு - சுவைக்கேற்ப
சர்க்கரை - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு அதனை மிக்ஸி ஜாருக்கு மாற்றிக் கொள்ளவும். இதனுடன் சாதம், துருவிய தேங்காய், இளநீர் சேர்த்து மென்மையாக அரைத்து பாத்திரம் ஒன்றில் மாற்றவும்.
அரைத்த மாவை 12 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பின்பு தேவையான அளவு தண்ணீர், உப்பு, சர்க்கரை சேர்த்து ஆப்ப மாவு பதத்திற்கு கரைத்து எடுத்து தோசை சுட்டு எடுக்கவும்.
சட்னி செய்வதற்கு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து, எண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம், எள்ளு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, பச்சை மிளகாய், புளி இவற்றினை வதக்கவும்.

இதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து நன்றாக வதக்கி, தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கி இறக்கவும்.
வதக்கிய பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். இறுதியாக கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கினால் முருங்கைக்கீரை சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |