பட்லரின் அதிரடி, சாஹலின் சூழலில் சுருண்ட கொல்கத்தா - ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
ஐபிஎல் தொடரின் 30வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
ஜோஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியை தொடங்கிய பட்லர் அரைசதம் விளாசினார். மறுமுனையில் படிக்கல் 24 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
பட்லரின் சதம்
விக்கெட் இழப்புகளுக்குள் மத்தியில் தனது அதிரடியை கைவிடாத தொடக்க வீரர் பட்லர் சதம் விளாசினார். 61 பந்துகளில் 9 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு 103 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, ஷிம்ரோன் ஹெட்மியர் 26 ரன்களும், அஸ்வின் 2 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியினர், தொடக்க வீரர் சுனில் நரைன் முதல் ஓவரின் 2வது பந்தில் ரன் ஓட முயன்று ரன் -அவுட் ஆகி வெளியேறினார்.
ஸ்ரேயாஸுன் அதிரடி
இதன் பின்னர் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி அமைத்த மற்றொரு தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச் அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்தார். 28 பந்துகளில் 9 பவுண்டரிகளை ஓட விட்ட அவர் 2 சிக்ஸர் விளாசி 58 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஆனாலும், தனது பொறுப்பான ஆட்டத்தால், கேப்டன் ஷ்ரேயாஸ் சிக்ஸர், பவுண்டரி என பறக்க விட்டு அரைசதம் அடித்தார். 51 பந்துகளில் 4 சிக்ஸர் 7 பவுண்டரி என ரன் மழை பொழிந்து 85 ரன்கள் குவித்த கேப்டன் ஷ்ரேயாஸ் சாஹலின் சுழல் வலையில் சிக்கி ஆட்டமிழந்தார்.
சாஹலின் சுழலில் சிக்கிய கொல்கத்தா
தொடர்ந்து, சிவம் மாவி, பாட் கம்மின்ஸ் போன்றோரும் சாஹலின் சுழல் சூறாவளிக்கு பலியாகினார்கள். இதனால், சாஹல் ஹாட்ரிக் விக்கெட்டையும் கைப்பற்றினார். கிட்டத்தட்ட தோல்வி பாதைக்கு சென்ற கொல்கத்தா அணியை உமேஷ் யாதவ், டிரென்ட் போல்ட் வீசிய 18வது ஓவரை சிக்ஸர், பவுண்டரி (6,2,6,4,1) என வெளுத்து வாங்கினார்.
இதனால், கொல்கத்தாவின் வெற்றிக்கு 12 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா 7 ரன்கள் மட்டும் கொடுக்க கொல்கத்தாவுக்கு கடைசி 6 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது.
மெக்காய் வீசிய 20வது ஓவரை சந்தித்த ஷெல்டன் ஜாக்சன் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அவர் அடுத்த பந்திலே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 3 வது பந்தில் வருண் சக்கரவர்த்தி ஒரு ரன் எடுக்க 4வது பந்தை சந்தித்த உமேஷ் சிக்ஸர் அடிக்க முயன்று போல்ட் அவுட் ஆனார்.
இதனால், அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த கொல்கத்தா அணி 210 ரன்னில் சுருண்டது. இந்த அசத்தலான வெற்றியின் மூலம் ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஆரஞ்சு ஊதா தொப்பியும் ஒரே அணியில்
மேலும், இந்த அசத்தலான வெற்றியின் மூலம் ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதில், சுவாரஷ்யமான விஷயம் என்னவென்றால், அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கான ஊதா நிற தொப்பியும் ராஜஸ்தான் அணி வீரர்கள் வசம் தான் உள்ளது.