ஐபிஎல் 2022; புதிய அணிகளுக்கு திடீரென கெடு விதித்த பிசிசிஐ.. அதிர்ச்சியில் அகமதாபாத், லக்னோ அணிகள்;
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. புதியதாக இணைந்துள்ள ஐ.பி.எல். அணிகளுக்கு பி.சி.சி.ஐ. வாய்ப்பு ஒன்றை வழங்கியது.
ஏலத்திற்கு முன்பே 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி புதிய அணிகள் கே. எல்.ராகுலிடம் ஆசை வார்த்தை கூறி, பஞ்சாப் அணியில் தொடர வேண்டாம் என லக்னோ அணி கூறியது.
இது தொடர்பாக பஞ்சாப் அணி, பி.சி.சி.ஐ.யிடம் புகார் அளிக்க , அது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே போன்று ஐதராபாத் அணியில் இடம்பெற்ற ரஷித் கானையும் லக்னோ அணி, ஏலத்திற்கு முன்பே தேர்வு செய்ய முடிவு எடுத்தது.
இதேப்போல், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை ஏலத்திற்கு முன்பே தேர்வு செய்ய அகமதாபாத் அணியும் நடவடிக்கையை மேற்கொண்டன. ஆனால், புதிய அணிகள் வழங்கும் தொகையை விட ஏலத்திற்கு சென்றால் 18 கோடி ரூபாய் வரை கிடைக்கும் என்று நட்சத்திர வீரர்கள் யோசிக்கின்றனர்.
இதனால் அவர்களை ஒப்பந்தம் செய்வதில் புதிய அணிக்கு தலைவலியாக உள்ளது. இந்நிலையில், ஏலத்திற்கு முன்பே 3 வீரர்களை தேர்வு செய்ய வரும் 22-ம் தேதி மாலை 5 மணியே கடைசி என்று புதிய அணிகளுக்கு பி.சி.சி.ஐ. கெடு விதித்துள்ளது.
மேலும், பி.சி.சி.ஐ.யின் இந்த அறிவிப்பால் அகமதாபாத், லக்னோ அணிகள் அதிர்ச்சியில் உள்ளன. ஜனவரி 31-ம் தேதி வரை நேரம் இருப்பதாக கூறி விட்டு, தற்போது திடீரென்று காலக்கெடுவை குறைத்தால் தாங்கள் என்ன செய்ய முடியும் என்று அந்த அணிகள் தெரிவித்துள்ளன.