சிக்ஸர் அடித்து ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்த கேப்டன் தோனி! வெளியேறிய ஹைதராபாத் அணி
ஹைதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி மீண்டும் வெற்றியை பறித்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 134 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சாஹா 44 ரன்கள் எடுத்தார்.
சென்னை அணியைப் பொறுத்தவரை ஜோஸ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளும், பிராவோ 2 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதன்பின்னர், 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சென்னை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 45 ரன்களும், டு பிளசிஸ் 41 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து வந்த மொயின் அலி 17 ரன்களிலும், சுரேஷ் ரெய்னா 2 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
பின்னர், கேப்டன் தோனி மற்றும் அம்பட்டி ராயுடு கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனாலும் ஹைதராபாத் அணி தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம், சிஎஸ்கேவை அச்சுறுத்தியது.
இதனால் கடைசி 3 பந்துகளுக்கு 2 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்னை அணி சென்றது. அப்போது கேப்டன் தோனி சிக்சர் விளாசி போட்டியை முடித்து வைத்தார்.
இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் முதல் அணியாக சிஎஸ்கே தகுதி பெற்றுள்ளது.