இந்தியாவின் கடைசி நிலம் “தனுஷ்கோடி”! இலங்கையிலிருந்து 31 கி.மீ தொலைவு மட்டுமே
இந்தியாவின் கடைசி சாலை மற்றும் கடைசி நிலம் தனுஷ்கோடி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை தான்.
தனுஷ்கோடி
தனுஷ்கோடி (Dhanushkodi) தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புயலால் அழிந்த ஒரு நகரம் ஆகும்.
இது பாம்பனுக்கு தென் கிழக்கே, இராமேஸ்வரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
இங்கு வங்கக் கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் புகழ் பெற்றது. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக இந்துக்கள் நம்புகின்றனர்.

தனுஷ்கோடி என பெயர் வந்தது ஏன்?
வில் என்றால் தனுஷ் என்று பொருள், வில்லைப் போன்று வளைந்த கடற்கரையைக் கொண்டிக்கிறது.
கோடி என்பது முனை. வானைத் தொடும் முனை 'கோடு'. அதுபோலக் கடலில் அமைந்துள்ள நிலமுனை இந்தக் 'கோடி' , இதுவே தனுஷ்கோடி என பெயர் வர காரணமாயிற்று.

பரபரப்பான துறைமுகம்
ஒரு காலத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கிய இடம். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான வியாபாரத் தொடர்பாக இந்த நகரமே இருந்தது. தொழில் நிமித்தம் தமிழகம் முழுக்க இருந்து ஏராளமானோர் இங்கு வந்து செல்வார்கள்.
இந்தியா வழியாக இலங்கை செல்ல விரும்புபவர்களுக்கென அந்நாளில் போட் மெயில் சர்வீஸ் இருந்து வந்தது.
ரயில் மற்றும் கப்பல் வழி பயணமான இதில், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயிலில் தனுஷ்கோடிக்கு முதலில் வரவேண்டும்.
அங்கிருந்து இலங்கை செல்ல தயாராக இருக்கும் இர்வின் கோஷன் என்ற கப்பலில் பயணித்து இலங்கையை அடையலாம்.
இது தவிர, தனுஷ்கோடிக்கு வர விரும்பும் யாத்திரைவாசிகள் மற்றும் உள்ளூர் பயணிகளுக்காக ‘வாட்டர் டாங்’ எனப்படும் பயணிகள் ரயிலும் நாள்தோறும் இயங்கி வந்தது.

ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவம்
1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய அந்த புயல் தனுஷ்கோடியை சின்னப்பின்னமாக்கியது, ரயில் நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், நகரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் என ஒன்றுகூட புயலுக்கு தப்பவில்லை.
அரசு கட்டிடங்களுக்கே இந்த நிலை என்றால், ஏழை மக்களின் குடிசைகளை பற்றி சொல்லவா வேண்டும்?
இந்த கோர விபத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர், அதன் பின்னர் தமிழக அரசு இந்த ஊரை வாழத் தகுதியற்றதாக அறிவித்தது.


தற்போதைய நிலை
தற்போது தனுஷ்கோடி கம்பிப்பாடு, பாலம், முகுந்தராயர்சத்திரம் ஆகிய கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழிலை நம்பி 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தற்காலிகமாக குடிசைகளை அமைத்து தினமும் நாட்டுப்படகு, சிறிய வத்தைகளில் சென்று மீன்பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர். மீன் சுட்டுத் தருவது, சிப்பி, முத்துக்களால் ஆன மணி மாலைகளால் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.
முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடியின் கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை கடற்கரை வரை 9.5 கி.மீ. தூரத்திற்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

இராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அரிச்சல்முனை கடற்கரை வரை வந்து செல்கின்றனர்.
இராமேஸ்வரம் கோயிலில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன, 45 நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பெருமளவில் தனுஷ்கோடிக்கு வந்து செல்கின்றனர்.

சர்க்கரை நோயை குணப்படுத்தும் மூலிகை டீ - எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்?