75 ஆண்டுகளாக இலவச சேவை வழங்கும் இந்தியாவின் ஒரே ரயில்! என்ன காரணம்?
பொதுவாகவே ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால், நிச்சயம் டிக்கெட் வாங்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும். தற்காவத்தில் இந்த சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக பயணிகளுக்கு இலவச சேவையை வழங்கிவரும் ஒரு ரயிலும் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்தா?

ஆம், தினமும் முற்றிலும் இலவசமாக இயங்கி வரும் இந்த ரயில் எங்கு ஆரம்பித்து எங்கு பயணிக்கின்றது, மற்றும் இந்த இலவச ரயில் குறித்த பல்வேறு விடயங்களையும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இலவச ரயில் சேவை
இந்த ரயிலானது, தினசரி பஞ்சாபின் நங்கல் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பக்ராவுக்கும் இடையே 13 கி.மீ. தூரம் பயணிக்கிறது. இந்த சேவையை கடந்த 75 ஆண்டுகளாக இலவசமாக வழங்குகின்றது. குறித்த ரயிலானது அழகிய சட்லஜ் நதி மற்றும் சிவாலிக் மலைகளின் வழியாகச் செல்கிறது.

இந்த ரயில் சேவை 1948இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ஆசியாவின் மிக உயரமான அணைகளில் ஒன்றான பக்ரா-நங்கல் அணையின் கட்டுமானத்திற்காக தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்வதற்காகவே இந்த ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1953ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டீசல் என்ஜின்கள் குறித்த ரயிலில் பொருத்தப்பட்டதுடன், அதன் இருக்கைகள் எளிமையாக இருந்தாலும், இந்த ரயிலின் நீண்ட வரலாற்றைப் பிரதிபலிக்கிறது.

குறித்த ரசிலானது ஒரு மணி நேரத்திற்கு 18 முதல் 20 லிட்டர் எரிபொருள் செலவழித்தாலும், இந்தப் பகுதி மக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அணை கட்டுமானத்தில் பங்கேற்றவர்களை நினைவுகூறும் முகமாகவும் இந்த சேவையை இலவசமாகவே இன்று வரையில் தொடர்ந்து வருகின்றது.
இந்த ரயிலில் தினம்தோறும் சுமார் 800 பேர் வரையில் பயணம் செய்கின்றனர். இந்த வழித்தடத்தில் 3 சுரங்கப்பாதைகள் மற்றும் 6 ரயில் நிலையங்கள் காணப்படுகின்றது.

இதுவரையில், எத்தனை முறை அரசாங்கங்கள் மாறியிருந்தாலும், காலநிலைகள் வாழ்க்கை முறைகள் மாறியிருந்தாலும் ரயில்வே அமைப்பில் நவீன மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஒரு சேவை மட்டும் மாறாமல், அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |