99 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா முக்கிய அறிவிப்பு; மத்திய அரசின் புதிய சலுகை
கொரோனா வைரஸ் ஆனது உலகம் முழுவதும் இன்றளவும் பரவிக்கொண்டு தான் வருகிறது. அதில், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
சில நாடுகளில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மறுபடியும் தலைதூக்கிவிட்டது.. சீனா, ஜெர்மன், போன்ற நாடுகளில் வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. எனினும் அனைத்து நாடுகளுமே தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு தடை விதித்தது இருந்தது. அதோடு, நாட்டின் எல்லைகளையும் அடைத்துவிட்டது. அதற்கு பிறகுதான் தொற்று மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.
பின்னர் மற்ற நாட்டினர்களை இந்தியாவுக்கு அனுமதியளித்த நிலையில், 14 நாட்கள் கட்டாயமாக தனிமையில் இருக்க வேண்டும். தனிமையை பின்பற்றினால் மட்டுமே நாட்டிற்குள் அனுமதி என்று கட்டுப்பாடு இருந்தது.

தற்போது, வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளதால், இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
அதிலும், குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில் உள்பட 99 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் 14 நாட்கள் கட்டாயத்தனிமைப்படுத்தலை பின்பற்ற வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறை கடந்த 13-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதேசமயம், இந்த 99 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தங்கள் உடல்நிலையை தங்களை தாங்களே கண்காணித்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 99 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திருக்க வேண்டுமாம்.