40 வயது இளைஞருக்காக உயிர்துறந்த 85 வயது முதியவர்... நெகிழ்ச்சி சம்பவம்
இந்தியாவில் 40 வயது இளைஞரின் உயிரைக் காப்பாற்ற 85 வயது முதியவர் தனது ஆக்ஸிஜன் படுக்கையை விட்டுக்கொடுத்துவிட்டு உயிரிழந்தது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட நாராயணன் தபால்கரே(85) என்ற முதியவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது.
ஆக்ஸிஜன் படுக்கையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு வந்த 40 வயது இளைஞர் ஆக்ஸிஜன் படுக்கை இல்லாமல் மருத்துவமனையில் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனை அவதானித்த முதியவர் தன்னை விட வயதில் சிறியவரான இளைஞரின் உயிரைக் காப்பாற்ற நினைத்தவர், தனது படுக்கையை விட்டுக்கொடுக்க முடிவுஎடுத்து, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கு மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
ஆனால் மருத்துவர்கள் ஒத்துக்கொள்ளாத நிலையில் முதியவர் வீடு திரும்பினார். வாழ்ந்து முடிந்துவிட்ட தான் இறப்பதால் ஒரு இழப்பும் இல்லை என்று மருத்துவர்களிடம் கூறிய அவர் இளைஞரைக் காப்பாற்றுமாறு கூறிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் வீட்டுக்குச் சென்ற 3 தினங்களுக்குள் அவர் பரிதாபமாக நேற்று உயிரிழந்துள்ளார். 40 வயது இளைஞருக்கு 85 வயது முதியவர் உயிர்துறந்துள்ளது நெகிழ்ச்சியினையும், சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.