மீதமான இட்லியை தூக்கிப் போடாதீங்க! சுலபமாக இட்லி போண்டா செய்யலாம்
இந்திய மக்களின் காலை உணவுப்பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளது இட்லி. இவ்வாறு காலை உணவில் செய்யப்படும் இட்லி சில தருணங்களில் மீந்து போய்விடும்.
இப்படி மீந்த இட்லிகளை வைத்து நம்மில் அதிகமானோர் இட்லி உப்புமா, சில்லி இட்லி போன்றவற்றை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம்.
ஆனால் தற்போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ருசித்து சாப்பிடும் இட்லி போண்டா செய்வது எவ்வாறு என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருள்கள் :
இட்லி - 5
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
கடலை மாவு - 4 ஸ்பூன்
கார்ன் பிளார்- 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லித்தழை-கையளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மீந்து போன இட்லியை ஒரு பாத்திரத்தில் நன்றாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை, பச்சை மிளகாய் இவற்றினை பொடியாக அரிந்து வைக்கவும்.
உதிர்த்து வைத்த இட்லி, அரிந்து வைத்த மற்ற பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். பின்பு அந்த கலவையில் கடலை மாவு, சோள மாவு, உப்பு இவற்றினை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து வைத்து, சிறு சிறு துண்டுகளாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடான பின்பு உருட்டி வைத்திருக்கும் இட்லியை போட்டு, குறைந்த தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொண்டால் மொறுமொறுவென இட்லி போண்டா தற்போது தயார்....