ஹைதராபாத் பாணியில் அசத்தல் சிக்கன் வறுவல்... இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே அசைவ பிரியர்களின் உணவு பட்டியலில் சிக்கன் முக்கிய இடம் வகிக்கின்றது. சிக்கனை எப்படி செய்தாலும் சாதம், இட்லி, தோசை மற்றும் பிரட் என எல்லா உணவுடனும் சூப்பராக ஒத்துபோகும்.
எப்போதும் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாகவும் கூடுதல் சுவையுடனும் சிக்கன் சமைக்க வேண்டும் என்றால் ஹைதராபாத் பாணியில் ஒரு முறை இப்படி சிக்கன் வறுவல் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
வெங்காயம் - 3 (நீளவாக்கில் நறுக்கியது)
சிக்கன் - 3/4 கிலோ கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
புளிப்பில்லாத தயிர் - 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
சோம்பு தூள் - 1/2 தே.கரண்டி
சீரகத் தூள் - 1/2 தே.கரண்டி
மிளகுத் தூள் - 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 1/2 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - பாதி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு கண்ணாடி பதத்திற்கு நன்றான வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து சிக்கனை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், புளிப்பில்லாத தயிர், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்பு தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு மற்றும் பாதி எலுமிச்சையை பிழிந்து விட்டு நன்றாக பிசைந்துவிட்டு 30 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து வெங்காயம் வறுத்த எண்ணெய் பாத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைத்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்றாக தாளித்து ,ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, சிக்கனின் நிறம் மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரத்தை மூடி வைத்து 5 நிமிடங்கள் வரையில் மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் நன்றாக வேகவிட வேண்டும். பின்னர் நன்றாக மசாலாக்களை கிளறிவிட்டு 10-15 நிமிடங்கள் எண்ணெய் பிரியும் வரையில் வேகவிட்டு இறுதியில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ஹைதராபாத் சிக்கன் வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |