ஹைதராபாத் ரோட்டுக்கடை தண்ணி சட்னி- இலகுவாக செய்வது எப்படி?
தென்னிந்தியர்கள் காலையுணவாக பெரும்பாலும் இட்லி, தோசையை தான் சாப்பிடுவார்கள். அதற்கு சைடு டிஷ்ஷாக பெரும்பாலும் சட்னி தான் செய்வார்கள்.
தினமும் ஒரே மாதிரியான சட்னி செய்யும் பொழுது வீட்டிலுள்ளவர்கள் உங்களுடைய சாப்பாட்டை பெரிதாக விரும்பி சாப்பிடமாட்டார்கள்.
அப்படி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக ஹைதராபாத் ரோட்டுக்கடை தண்ணி சட்னி செய்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். வீட்டிலுள்ளவர்களும் காலையில் எந்தவித குறையும் சொல்லாமல் சாப்பிடுவார்கள்.
அந்த வகையில், காரசாரமான ஹைதராபாத் ரோட்டுக்கடை தண்ணி சட்னி எப்படி ரோட்டுக்கடை பாணியில் செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 4
- புளி - சிறிய துண்டு
- பூண்டு - 6 பல்
- வேர்க்கடலை - 1/2 கப்
- பொட்டுக்கடலை - 1/2 கப்
- உப்பு - சுவைக்கேற்ப
- தண்ணீர் - தேவையான அளவு
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் - சிறிது
- கறிவேப்பிலை - 1 கொத்து
ரோட்டுக்கடை தண்ணி சட்னி அரைப்பது எப்படி?
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புளி மற்றும் பூண்டு பற்களை போட்டு நன்றாக வதங்க விடவும்.

வதங்கிய பின்னர், கொஞ்சமாக ஆற விட்டு, வதக்கிய பொருட்களை வேர்க்கடலை, பொட்டுக்கடலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
நன்றாக அரைத்த பின்னர், ஒரு கிண்ணத்திற்கு சட்னியை மாற்றி கொஞ்சமாக தண்ணீர் கலந்து கொள்ளவும். இறுதியாக அதே கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளிக்கவும்.

தயார் நிலையில் இருக்கும் சட்னியின் மேல் தாளிப்பை போட்டு கிளறினால் சுவையான ரோட்டுக்கடை தண்ணி சட்னி தயார்!
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |