உயிரிழந்த அன்பு மனைவி : ரூ.9 லட்சம் செலவில் சிலை அமைத்து பூஜை செய்யும் கணவர்!
விருதுநகர் மாவட்டத்தில் உயிரிழந்த அன்பு மனைவிக்கு ரூ.9 லட்சத்தில் சிலை செய்த கணவனின் செயலால் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மனைவிக்கு சிலை அமைத்து பூஜை செய்யும் கணவர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, நேஷ்னல் காலனியில் வசிப்பவர் நாராயணன்(85). இவருடைய மனைவி ஈஸ்வரி (65). இத்தம்பதிக்கு ஆனந்த், அம்சா, அமிர்தபானு, பாபு என்ற 4 பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மனைவி இழந்த துக்கம் தாங்க முடியாமல் நாராயணன் தவித்து வந்துள்ளார்.
இதன் பிறகு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் உள்ள ஒரு சிற்பியிடம் தன் மனைவி புகைப்படத்தை கொடுத்து ரூ.2 லட்சம் செலவு செய்து சிலை ஒன்றை தயார் செய்து வாங்கியுள்ளார். அந்த சிலைக்கு தினமும் தன் வீட்டில் வைத்து பூஜை செய்து வந்துள்ளார்.
இதனையடுத்து, பெங்களூருவில் உள்ள ஒருவரிடம் சிலிக்கான் ரப்பரில் சிலை தயார் செய்து கொடுக்க கேட்டுள்ளார். அந்த நபர் சுமார் 14 மாதங்களாக ஈஸ்வரின் உருவத்தை தத்ரூபமாக வடிவமைத்து கொடுத்துள்ளார். இந்த சிலிப்பான் ரப்பர் சிலைக்காக நாராயணன் ரூ. 9 லட்சம் செலவு செய்துள்ளார்.
இதன் பிறகு இந்த சிலையை வீட்டிற்கு கொண்டு வந்து, உறவினர்களை அழைத்து சிறப்பு பூஜை செய்துள்ளார். தத்ரூபமாக அமைக்கப்பட்ட ஈஸ்வரியின் சிலையைப் பார்த்து உறவினர்களும், ஊர் மக்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மனைவி மேல் நாராயணன் வைத்த அன்பை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.