டெஸ்லாவின் மனித 'மாதிரி' ரோபோ - இதில் என்ன சிறப்புகள்?
உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க் தமது டெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மனித மாதிரி ரோபோவின் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஆப்டிமஸ் என்று அழைக்கப்படும் இந்த ரோபோ, சிலிக்கான் பள்ளத்தாக்கு நிகழ்வில் மேடையில் அவர் அறிமுகப்படுத்தினார். அங்கு அது பார்வையாளர்களுக்கு கை அசைத்தது. டெஸ்லாவின் வருடாந்திர செயற்கை நுண்ணறிவு நாள் நிகழ்ச்சியில், இந்த ரோபோவின் முன்மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் நடந்த முக்கிய அம்சங்கள் இங்கு தொகுத்து வழங்குகிறோம்:
* இந்த ரோபோ தயாரிப்பில் இன்னும் வேலைகள் பாக்கி உள்ளது என்றும், ஆனால் சில ஆண்டுகளில் பொதுமக்களுக்கு இது விற்பனைக்கு வரலாம் என்று தலைமை செயல் அதிகாரி கூறினார்.
* டெஸ்லா நிறுவனம் வெகுஜனங்களுக்காக உருவாக்கும் ரோபோக்கள், கார் தொழிற்சாலைகளில் நடக்கும் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு பரிசோதிக்கப்படும் என்று அந்நிறுவன பொறியாளர்கள் கூறுகின்றனர்.
* செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, பெட்டிகளை எடுத்துச் செல்வது மற்றும் உலோகக் கம்பிகளைத் தூக்குவது போன்ற எளிய பணிகளை ஆப்டிமஸ் செய்யும் வீடியோ மக்களுக்கு காண்பிக்கப்பட்டது.
— Elon Musk (@elonmusk) October 1, 2022
* இந்த ரோபோக்கள் மொத்தமாக 20,000 டாலர் செலவில் தயாரிக்கப்படும் என்றும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் கிடைக்கும் என்றும் மஸ்க் கூறினார்.
* இதற்கு எதிர்காலத்தில் பெரும் வரவேற்பு உள்ளது என்கிறார் ஈலோன் மஸ்க். "இது உண்மையில் நாம் அறிந்த நாகரிகத்தின் அடிப்படையை மாற்றக்கூடிய ஒன்று என்று அவர் தெரிவித்தார்.
* டெஸ்லா நிறுவனம் தனது கவனத்தை ரோபாட்டிக்ஸ் பக்கம் திரும்பும் என்று முதலீட்டாளர்களும் நிதி ஆய்வாளர்களும் நினைக்கின்றனர். அவர்கள் டெஸ்லாவின் முக்கிய வணிகமான மின்சார கார்கள் தொடர்பான திட்டங்களில் கவனம் செலுத்துமாறு அதன் தலைமைக்கு அறிவுறுத்தினர். ஆனால், செயற்கை நுண்ணறிவு என்ற கடினமான பிரச்னைகளில் ஒன்றான, 'மனிதனுக்குப் பதிலாக ஒரு இயந்திரத்தை எப்படி உருவாக்குவது' என்பதை தீர்க்க விரும்புவதாக அவர் கூறினார்.
* செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஒரு முறை எச்சரிக்கை விடுத்த இவர், இத்தகைய ரோபோக்கள் மூலம் மக்கள் பலன்களை அடையும் ஒரு சமூகமாக மாறுவதை டெஸ்லா உறுதி செய்ய விரும்புவதாக அவர் கூறினார்.
— Tesla (@Tesla) October 1, 2022
* டெஸ்லா இதற்கு 'ஸ்டாப் பட்டன்' உள்ளிட்ட பாதுகாப்புகளை உருவாக்கி வருவதாக அவர் மேலும் கூறினார்.
பொதுவெளியில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனம் சமூகப் பொறுப்புடையதா என்பதை பங்குதாரர்கள் தீர்மானிப்பார்கள் என்று மஸ்க் வாதிட்டார்.
செயற்கை நுண்ணறிவு நாள் நிகழ்வன்று, சமீபத்திய தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது டெஸ்லா.