1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல வாயில் வெச்சதும் கரையுற.. இந்த ஸ்வீட்டை செஞ்சு பாருங்க..
Moong Dal Halwa Recipe In Tamil: அசைவம் சாப்பிட்ட பின் நிறைய பேருக்கு ஸ்வீட் சாப்பிட வேண்டுமென்ற ஒருவித ஆவல் எழும். அதுவும் விடுமுறை நாளில் வீட்டில் மதிய வேளையில் வயிறு முட்ட அசைவம் சாப்பிட்ட பின், மாலை வேளையில் கட்டாயம் ஸ்வீட் சாப்பிட வேண்டுமென்ற ஆசை எழும்.
உங்கள் வீட்டில் உள்ளோரும் அப்படி தானா? ஏதாவது ஸ்வீட் செய்து கொடுக்க கேட்கிறார்களா? அப்படியானால் வீட்டில் 1/2 கப் பாசிப்பருப்பு இருந்தால், அதைக் கொண்டு வாயில் வைத்ததும் கரையக்கூடிய பாசிப்பருப்பு அல்வாவை செய்து கொடுங்கள்.
இப்படிப்பட்ட பாசிப்பருப்பு அல்வாவை சமீபத்தில் விண்வெளிக்கு சென்ற சுபன்ஷு சுக்லா இந்திய கொடியுடன் சேர்த்து கொண்டு சென்றுள்ளார் என்பது தெரியுமா? பிரதமர் மோடியுடனான ஒரு சிறப்பு அழைப்பின் போது, சுபன்ஷு சுக்லா மோடியிடம் இதை தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட பாசிப்பருப்பு அல்வாவை உங்கள் வீட்டில் சுவைத்து பார்க்க நினைக்கிறீர்களா? அப்படியானால் இன்றே ட்ரை செய்து பாருங்கள்.
உங்களுக்கு பாசிப்பருப்பு அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
நெய் - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 15
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவி விட்டு, குக்கரில் போட்டு, 1 1/2 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து, 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பு நன்கு குளிர்ந்ததும், மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி பருப்புக்களை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து, அவற்றை ஒரு தட்டில் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே நெய்யில் கோதுமை மாவை சேர்த்து மிதமான தீயில் வைத்து 1 நிமிடம் வறுக்க வேண்டும்.
அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்
அடுத்து அதில் 1 கப் சர்க்கரையை சேர்த்து கிளறி விட வேண்டும்.
பிறகு மீதமுள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அதன் பின் அதில் சிறிது கேசரி பவுடரை எடுத்து நீரில் கரைத்து ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்
அடுத்து நல்ல வாசனைக்காக 1/4 டீஸ்பூன் ஏலக்காய் பொடியை சேர்த்து, அத்துடன் வறுத்த முந்திரி மற்றும் மீதமுள்ள அனைத்து நெய்யையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு அல்வா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
