தீபாவளி ஸ்பெஷல் நெய் மைசூர் பாக்.. அட்டகாசமான சுவையில் வீட்டில் செய்வது எப்படி?
தீபாவளி பலகாரமாக நெய் மைசூர் பாக் கடையில் வாங்காமல் வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தீபாவளி நெருங்கும் நிலையில் மக்கள் வீட்டில் இனிப்பு வகைகளை செய்ய யோசனை செய்து வருகின்றனர். பொதுவாக தீபாவளி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது பட்டாசு, புத்தாடை, இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் தான்.
தாத்தா பாட்டி காலங்களில் கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே அனைத்து பலகாரங்களையும் செய்து வந்தனர். ஆனால் தற்போதைய காலத்தில் அனைத்து உணவினையும் கடைகளில் வாங்கி சாப்பிடும் நிலையில் மக்கள் உள்ளனர்.
தற்போது வாயில் வைத்த உடனேயே கரையும் மைசூர் பாக் வீட்டில் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 1½ அல்லது 2 கப்
நெய் – 1 கப்
தண்ணீர் – ½ கப்
செய்முறை
முதலில் கடலை மாவை கட்டிகள் இல்லாமல் நன்றாக சலித்து எடுத்து, ஏற்கனவே உருக்கி வைத்துள்ள நெய்யில் பாதியளவு இதில் சேர்க்கவும்.
கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும். மற்றொரு புறம் மைசூர் பாக் ஊற்றுவதற்கு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளவும். இதில் நெய் தடவி எடுத்துக் கொள்ளவும்.

பின்பு கனமான கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து கம்பி பதம் வருமாறு பாகு எடுத்துக் கொள்ளவும்.
உடனே தீயை குறைத்துக் கொண்டு, அதனுடன் நெய் கலந்து வைத்துள்ள கடலைமாவை சர்க்கரை பாகில் ஊற்றி கைவிடாமல் நன்றாக கிளற வேண்டும்.

மைசூர் பாகு பதத்திற்கு வரும் நிலையில், இதனுடன் மீதம் இருக்கும் நெய்யை 3 தடவையாக கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும் பதத்திற்கு வரும் வரை கிளறி விடவும்.
கடைசியாக ஒன்றாக திரண்டு வந்ததும், அதில் நெய் தடவிய தட்டில் ஊற்றி சமநிலைப்படுத்தவும். 15 நிமிடங்களுக்கு பின்பு கத்தியால் விருப்பமான துண்டாக வெட்டி எடுத்தால் சுவையான, மிருதுவான நெய் மைசூர் பாக் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |