முட்டையே இல்லாமல் ஆட்லெட் செய்யணுமா? இனி இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே முட்டை குறித்து ஆரோக்கிய பலன்களை கணிப்பதற்கு முன்பு சுவையின் அடிப்படையில் பார்த்தோமானால், முட்டையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இறைச்சி உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பவர்கள் கூட முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். காரணம் புரத்தின் மிகச்சிறந்த மூலமாக முட்டை அடையாளப்படுத்தப்படுவது தான்.

ஆனால் முட்டையும் சாப்பிடாமல் சுத்த சைவமாக இருப்பவர்கள் மற்றும் வீகன் வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களால் முட்டையின் சுவையையும் அதன் ஆரோக்கிய பயன்களையும் அனுபவிக்க முடிவதில்லை.
இதற்கு தீர்வு கொடுக்கும் வகையில் முட்டை ஆட்லெட்டுக்கு நிகரான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுடன், முட்டையே இல்லாமல் எப்படி ஆம்லெட் செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை (ஊறவைத்தது) – 50 கிராம்
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது (நறுக்கியது)
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி (நறுக்கியது)
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை
கொண்டைக்கடலையை 5 தொடக்கம் 6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைத்து , தண்ணீரை வடிகட்டி, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடாக்கி, சிறிது எண்ணெயில் தடவி, ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
ஒரு சிறிய தோசை போல மெதுவாக பரப்பி, மிதமான தீயில் சமைத்து,பொன்னிறமாக மாறியதும் திருப்பிப் போட்டு, மறுபக்கமும் வேகவைத்து எடுத்தால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் முட்டையே இல்லாமல், முட்டைக்கு நிகரான புதத்துடன் ஆம்லெட் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |