சுடச்சுட தக்காளி தோசை செய்வது எப்படி?
நம்மில் பலரும் பெரும்பாலும் காலை மற்றும் இரவு உணவாக இட்லி, தோசை வகைகளை தான் அதிகமாக செய்து சாப்பிடுவோம்.
குறிப்பாக குழந்தைகள் இட்லியை விட தோசை வகைகளை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள் .
தோசை எனில் முட்டை தோசை, பொடி தோசை, ஆனியன் தோசை, அடை தோசை என்று பல விதங்களாக செய்து கொடுத்து இருப்பீர்கள்.
ஆனால் இன்று சற்று வித்தியாசமாக தக்காளி வைத்து தோசை செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி -முக்கால் கப்
- உளுத்தம்பருப்பு - அரை கப்
- வரமிளகாய் - 4
- தக்காளி - 3
- பூண்டு - 2 பல்
- உப்பு - தேவையான அளவு
- நெய் - தேவையான அளவு
செய்யும் முறை
பச்சரியையும் உளுத்தம்பருப்பையும் இரண்டு மணி நேரம் ஊறவைத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் மின் அரைப்பானில் முதலில் ஊறவைத்த பச்சாிசியும் வரமிளகாயையும் இட்டதன் பின்னர் ஊறவைத்த உளுத்தம் பருப்பையும் தக்காளியையும் சேர்க்க வேண்டும்.
தக்காளி நன்கு பழமாக இருக்க வேண்டும். தண்ணீர் சேர்க்க கூடாது. பின்னர் பூண்டு சேர்க்கலாம் அதன் பின் உப்பு தேவையான அளவு சேர்க்கவும். இதை நன்றாக அரைக்கவும், தண்ணீர் சேர்க்க தேவை இல்லை, தக்காளியில் உள்ள நீர் கலவையை அரைத்தெடுக்க உதவும்.
அரைத்த மாவை ஒரு கோப்பையில் எடுத்து ஒரு மணி நேரம் புளிக்க விடவும். ஒரு மணி நேரத்தின் பின்னர் கலவையை எடுத்து தோசை ஊற்றும் அளவிற்கு ஏற்ற விதத்தில் தண்ணீர் சேர்க்கவும்.
தோசைக்கல் சூடானதும் தோசை சுட்டு எடுத்தால் சுவையான தக்காளி தோசை தயாராகிவிடும்.