வீட்டில் பூசணிக்காய் இருக்கா? இந்த மாதிரி தோசை சுட்டு பாருங்க
பூசணிக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இதை பலரும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இப்படி தோசை சுட்டு கொடுத்தால் நிச்சயம் மிச்சம் வைக்க மாட்டார்கள்.

பூசணிக்காய் தோசை
பூசணிக்காய் இனிப்பு சுவை கொண்டதால் பலரும் இதை சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த பூசணிக்காயில் அதிக சத்துக்கள் இருக்கின்றது.
இது உடல் எடை குறைக்கவும் சரும ஆரோக்கியத்திற்கும் இப்படி பல ந்னமைகளை கொடுக்கின்றது.
குறிப்பாக கோடைக்காலத்தில் பூசணிக்காய் அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தருகின்றது.
அதன்படி பூசணிக்காயை வைத்து பல டிஷ்கள் செய்வார்கள் ஆனால் பூசணிக்காயை வைத்து தோசை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- துருவிய பூசணி - 1 கப்
- கடலை மாவு - 4 தேக்கரண்டி
- ரவை - 2 தேக்கரண்டி
- தயிர் - 2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 2
- கொத்தமல்லி இலைகள்
- சாட் மசாலா - 1 தேக்கரண்டி
- உப்பு - சுவைக்கேற்ப
- போதுமான எண்ணெய்
செய்முறை
முதலில் பூசணிக்காயை தோல் உரித்து நன்றாக துருவவும். அதில் இருக்கும் அதிக நீரை கைகளால் லேசாக பிழிந்து எடுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் ரவையை சேர்த்து கலக்கவும்.
அதில் துருவிய பூசணிக்காய் சேர்க்கவும். பிறகு தயிர், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். இப்போது சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் தோசை மாவு போல கெட்டியாக கலக்கவும்.

மாவு மிகவும் நீர்த்தமாக இருக்கக்கூடாது. மாவை மூடி சுமார் 10–15 நிமிடம் ஊற விடவும். இதனால் ரவை நன்றாக மென்மையாகும். அதன் பிறகு தவாவை சூடாக்கி சிறிது எண்ணெய் தடவவும்.
ஒரு கரண்டி மாவை எடுத்து தோசை போல வட்டமாக பரப்பவும். மிதமான தீயில் சுடவும். கீழ்பக்கம் பொன்னிறமாக வந்ததும் திருப்பி மறுபக்கமும் சுட்டு எடுக்கவும்.