Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
கேரளாவின் பாரம்பரிய உணவுகளில் முக்கியமான ஒன்று கடலை கறி. கருப்பு கொண்டைக்கடலை, தேங்காய், மிளகு, சீரகம், கொத்தமல்லி போன்ற மணமுள்ள மசாலாக்களுடன் மெதுவாக சமைக்கப்படுவது இதன் சிறப்பு.
புட்டு, அப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடப்படும் இந்த கறி, கேரள சமையலின் இயற்கை வாசனையும் ஊட்டச்சத்தையும் ஒரே நேரத்தில் வழங்கும் பாரம்பரிய உணவாக விளங்குகிறது.
கேரளா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புட்டும், கடலைக் கறியும் தான். புட்டுக்கு மட்டுமல்ல இடியாப்பம், தோசை, இட்லி, சப்பாத்தி என அனைத்திற்கு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும் கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கருப்பு சுண்டல் - 1 கப்
வெங்காயம் - 3
பல் பூண்டு - 5
இஞ்சி - சிறிய துண்டு
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை
பச்சை மிளகாய் - 2
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
சோம்பு - 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்

செய்யும் முறை
கருப்பு கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் உப்பு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு வதக்கி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள், மஞ்சள், மல்லி தூள், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி அரைக்கவும். மற்றொரு கடாயில் கடுகு, வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை வதக்கி அரைத்த விழுது, வேகவைத்த கடலை, தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |