10 நிமிஷத்துல ரெடியாகும் சுவையான கார பணியாரம்- செய்வது எப்படி?
குழிப்பணியாரம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
குழிப்பனியாரத்திற்கான மாவில் இனிப்பு, காரம் என இரண்டு வகைகளில் பனியாரம் செய்யலாம். நாம் இப்போது கார பனியாரம் எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
- பச்சரிசி – 1 கப்
- இட்லி அரிசி – 1 கப்
- உளுந்து – ½ கப்
- வெந்தயம் – ½ டீஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- கடுகு – ¼ டீஸ்பூன்
- கடலை பருப்பு – ½ டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 4
- பெரிய வெங்காயம் – 1
- பச்சை மிளகாய் – 3
- பூண்டு – 10 பல்
- சின்ன வெங்காயம் – ¼ கப்
- தக்காளி – 2
- புளி – நெல்லிக்காய் அளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- மல்லித்தழை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பச்சரிசி, இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாக சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் இதனை மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணியாக இல்லாமல் கொஞ்சம் கெட்டியான பதத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த மாவில் உப்பு சேர்த்து, கரைத்துக் கொள்ளுங்கள். அதனை 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும். அதன்பின், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்து மற்றும் கடலை பருப்பு சேர்த்து பொரிய விடுங்கள்.
இதில் ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு நன்கு சிவக்க விடுங்கள். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் போதே, இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்க வேண்டும்.
மேலும் இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாக, இதில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். இதனை மாவுடன் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
இப்போது, தக்காளி சட்னி வைப்பதற்காக, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வைத்த பூண்டு மற்றும் வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும்.
இதில் புளி சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் இதில் காய்ந்த மிளகாய்களை கிள்ளி போட்டு, தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். வதங்கியவுடன், அடுப்பை அணைத்து நன்றாக ஆறவிட வேண்டும்.
ஆறிய பின் ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதனை தாளித்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையான தக்காளிச் சட்னி ரெடி! இப்பொழுது, பனியாரச்சட்டியை அடுப்பில் வைத்து காயந்ததும், குழிகள் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.
எண்ணெய் காய்ந்ததும் அவற்றில் மாவை ஊற்றி வேக விட வேண்டும். எல்லா பக்கம் சமமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அருமையான கார பனியாரம் இப்போது ரெடி!