கன்னியாகுமரி ஸ்பெஷல் மீன் அவியல் எப்படி செய்றது?
Fish Aviyal Recipe: கன்னியாகுமரி ஸ்பெஷல் மீன் அவியல் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக அசைவ பிரியர்கள் கடல்வகை உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் கடலில் கிடைக்கும் ஒவ்வொரு உணவுகளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானதாகவே இருக்கின்றது.
மீன் பொரியல், குழம்பு, புட்டு இவ்வாறு செய்து சாப்பிடும் நிலையில், தற்போது தேங்காய் எண்ணெய் மணத்துடன் கன்னியாகுமரி ஸ்பெஷல் மீன் அவியல் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் - அரை கிலோ
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
புளி - சிறு துண்டு
தேங்காய் துருவல் - அரை கப்
சின்னவெங்காயம் - 7
பூண்டு - 3 பல்
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வத்தல் - 4
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மாங்காய் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1 ஸ்பூன்

செய்முறை
முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். புளியை கரைத்து சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் தேங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, தனியா, மிளகாய் வத்தல், கறிவேப்பிலை மஞ்சள் தூள், சீரகம் இவற்றினை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் மீனை சேர்த்து, இதனுடன் நறுக்கிய மாங்காய், இரண்டாக கீறிய பச்சை மிளகாய், உப்பு இவற்றினை சேர்க்கவும். இதனுடன் அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

இதனுடன் புளி கரைசலையும் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பில் வைத்து மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
கடைசியாக தாளிப்பதற்கு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளித்து மீனுடன் கொட்டி இறக்கினால் மீன் அவியல் தயார்.
இவ்வாறு அவியல் செய்வதற்கு நெத்திலி மீன் மட்டுமின்றி நீங்கள் எந்தவொரு மீனிலும் இதனை செய்து சாப்பிடலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |