கொத்தமல்லியில் ஊறுகாய் செய்யலாம் தெரியுமா? இந்த பிரச்சினைக்கு தீர்வு நிச்சயம்
பொதுவாகவே அனைவரும் சமையலில் விரும்பி பயன்படுத்தும் பொருட்களில் கொத்தமல்லி தனக்கென ஸ்பெஷல் இடத்தையே வைத்திருக்கின்றது என கூறினால் மிகையாகாது.
ஆமாங்க கொத்தமல்லி இலைகளோட வாசனையும் நிறமும் பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது.
இப்படிப்பட்ட கொத்தமல்லி இலைகள் வெறுமனே சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவது இல்லை மாறாக இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது.
வயிற்று கோளாறுகள், பசியின்மை மற்றும் செரிமான பிரச்சினை ஆகியவற்றுக்கு கொத்தமல்லி சிறந்த மருத்துவராக செயற்படுகிறது.
இவ்வளவு நற்குணம் நிறைந்த கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது கடினம் அதற்கு சிறந்த தீர்வே இந்த கொத்தமல்லி ஊறுகாய்.
அனைவருக்கும் பிடித்த கொத்தமல்லி இலைகளை வைத்து பசியை தூண்டும் வகையில் சட்டுன்னு ஊறுகாய் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி- ஒரு கட்டு
காய்ந்த மிளகாய்- தேவையான அளவு
1/2கப்- புளி
1/2 தே.க- வெந்தயம்
1தே.க- கடுகு
15-20- பூண்டு
எண்ணெய்- தேவையான அளவு
கறிவேப்பிலை- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
ஒரு பெரிய கைப்பிடி அளவு கொத்தமல்லி தழைக்கு மேல் கூறப்பட்ட அளவுகள் சரியாக இருக்கும்.
கொத்தமல்லி தழைகளை எடுத்து சுத்தம் செய்து கொஞ்சம் பொடியாக நறுக்கி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு கடாயில் மேற்குறிப்பிட்ட அளவு வெந்தயம், கடுகு சேர்த்து சரியான பதத்தில் வறுத்து அதனை பொடியாக்கிக்கொள்ளுங்கள்.
காய்ந்த மிளகாய் தேவையான அளவில் எடுத்து விதைகளை நீக்கிவிட்டு அதனையும் பதமாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
விதை நீக்கிய புளியை ஒரு கடாயில் தேவையான அளவு நீர் சேர்த்து பேஸ்ட் மாதிரியான பதத்தில் வரும் வரை நன்கு கொதிக்க வைத்து தயார் செய்துக்கொள்ளுங்கள்.
சிறிதளவு எண்ணெய்விட்டு நறுக்கிவைத்த கொத்தமல்லி தழைகளை நன்றாக வதக்கி எடுத்து கொண்டு இதனுடன் காய்ந்த மிளகாய் பொடி மற்றும் புளி பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சிறிதளவு வெந்தயம், கடுகு ,பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்றான பொரிந்த நிலையில் அரைத்து எடுத்து வைத்த கலவையை அதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் கொத்தமல்லி ஊறுகாய் ரெடி. இதை எந்த உணவுடனும் சேர்த்து சாப்பிடலாம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.