ஆந்திர ஸ்டைல் சுட்ட மாங்காய் ரசம்... ஒருமுறை மட்டும் வைத்து பாருங்க
ஆந்திரா ஸ்டைல் சுட்ட மாங்காய் ரசம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோடை காலம் ஆரம்பித்துவிட்டாலே மாங்காய் வியாபாரமும் ஆரம்பித்துவிடுகின்றது. மாங்காய் பிரியர்களுக்கு இது கொண்டாட்டமாகவே இருக்கும்.
மாங்காயை வைத்து வித்தியாசமான டிஸ் செய்பவர்களுக்கு அதிக மகிழ்ச்சி தான். ஆந்திரா ஸ்டைலில் சுட்ட மாங்காய் ரசம் ஒருமுறை செய்தால் மீண்டும் அதை தான் செய்ய ஆசை வருமாம்.
சுட்ட மாங்காய் ரசத்தினை தெலுங்கில் மாமிடிகாய பச்சை புளுசு என்று அழைக்கும் நிலையில், இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
பச்சை மாங்காய் - 2
பச்சை மிளகாய் - 2-3
வரமிளகாய் - 2
பூண்டு - 3-4 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
வெல்லம் - 1-2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - 1 கைப்பிடி
தாளிப்பதற்கு
எண்ணெய் - 1- டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1-2
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை
முதலில் மாங்காய் மற்றும் பச்சை மிளகாய், வரமிளகாய் இவற்றினை நெருப்பில் சுட்டு ஆற வைத்துக் கொள்ளவும்.
உரலில் சீரகம், பூண்டு, ஏற்கனவே சுட்டு வைத்துள்ள பச்சை மிளகாய், வரமிளகாய் இவற்றினை சேர்த்து இடித்துக் கொள்ளவும். மாங்காயை தோல் நீக்கி, சதை பகுதியை மட்டும் பாத்திரத்தில் எடுத்து, நன்றாக கையால் மசித்துக் கொள்ளவும்.

மசித்த மாங்காயில் இடித்து வைத்துள்ள விழுதை சேர்த்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தினையும் சேர்க்க வேண்டும். சுவைக்கு ஏற்ப உப்பு, வெல்லம், தேவையான தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
இதில் கொத்தமல்லி இலையையும் சேர்த்து கலந்து வைத்த பின்பு, கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து தாளிப்பதற்கு எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் ரச கலவை சேர்த்து இறக்கினால் ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |