சிக்கன் மிளகு வறுவல் - இந்த ஒரு பொருளை போட்டு செய்து பாருங்க
தற்போது அடைமழையில் எல்லோரும் வீட்டில் இருப்போம். இந்த குளிர் காலத்தில் எதாவது சாப்பிட தோன்றும். அதுவும் காரசாரமாக இருந்தால் அது போல ஒரு இன்பம் இல்லை.
வீட்டில் அடிக்கடி சிக்கன் சமைத்து சாப்பிடுவது வழக்கம். அந்த சிக்கனை மிளகு வறுவல் செய்து சாப்பிட்டால் குளிர்காலத்திற்கு காரசாரமாக இதமாக இருக்கும்.
இந்த மிளகு வறுவலுடன் ஒரு ரசம் வைத்து இது இரண்டையும் சுடு சாதத்துடன் சாப்பிட்டால் சுவை அள்ளும். கீழே சிக்கன் மிளகு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்
- சோம்பு - 1 டீஸ்பூன்
- மிளகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- வறுவலுக்கு
- நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- சோம்பு - 1/4 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - சுவைக்கேற்ப
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
- சிக்கன் - 1/2 கிலோ
- தண்ணீர் - சிறிது
- கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
- கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, மிளகு, சீரகம் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சியில் அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து, நன்கு வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் அதில் சிக்கனை கழுவி சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும். அதன் பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
20 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு 3 நிமிடம் பிரட்டி விட வேண்டும். நீர் ஓரளவு வற்றியதும், அதில் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவி கிளறி இறக்கினால், சுவையான சிக்கன் மிளகு வறுவல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |