சுடச்சுட சுவையான கார மிக்சர் செய்வது எப்படி?
கொரோனா காலக்கட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளை சுத்தமாக சாப்பிட வேண்டும்.
பொதுவாக நொருக்கு தீனி பிரியர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் வெளியில் கடைகளில் வாங்கி சாப்பிடுவது பாதுகாப்பானதாக இருக்காது.
இதனால் இன்று சுவையான காரமான மிக்சர் எப்படி வீட்டிலேயே செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு – ½ கிலோ கிராம்
- மிளகாய்த் தூள் – 15 கிராம்
- உப்பு – தேவையான அளவு
- நிலக்கடலைப் பருப்பு – 100 கிராம்
- பொரிகடலை – 100 கிராம்
- அவல் – 100 கிராம்
- கறிவேப்பிலை – 3 கொத்து
- வெள்ளைப் பூண்டு – 15 முதல் 20 இதழ்கள்
- பெருங்காயப் பொடி – தேவையான அளவு
- சமையல் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
மிக்சர் செய்முறை
வெள்ளைப் பூண்டினை நசுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும். கடலை மாவினை சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ளவும். பின் அதனை இரு சமபாகங்களாகப் பிரித்துக் கொள்ளவும்.
முதல் பாதியில் தேவையான உப்பு மற்றும் தேவையான மிளகாய்த் தூள் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும். பிசைந்த மாவினை ஓமப்பொடி அச்சு உள்ள முறுக்கு குழலில் அடைத்துக் கொள்ளவும்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து சமையல் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பெரிய முறுக்காக பிழிந்து விடவும். அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் வேக விடவும்.
ஓமப்பொடி இரண்டு புறங்கள் வெந்ததும் வெளியில் எடுத்து எண்ணெயை வடித்துவிட்டு வாயகன்ற பாத்திரத்தில் போடவும். இவ்வாறாக பிசைந்த மாவினை ஓமபொடியாகச் சுட்டு எடுக்கவும்.
ஓமப்பொடி வேகமாக வெந்து விடுவதால் சரியான பதத்தில் எடுக்கவும். கடலை மாவின் மற்றொரு பாதியுடன் தேவையான உப்பு மற்றும் மிளகாய்ப் பொடி, தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் கரைத்த மாவினை பூந்திக் கரண்டியில் ஊற்றி விடவும்.
பூந்திகள் ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு எண்ணெய் குமிழி அடங்கியதும் எடுக்கவும்.
எண்ணெயை வடித்து ஏற்கனவே சுட்டு வைத்துள்ள ஓமப்பொடியுடன் சேர்க்கவும்.
இவ்வாறாக கரைத்த எல்லா மாவினையும் பூந்திகளாகச் சுட்டு ஓமப்பொடியுடன் சேர்க்கவும். பின்னர் நிலக்கடலைப் பருப்பு, பொரிகடலை, கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியே எண்ணெயில் பொரித்து ஏற்கனவே உள்ள பொரித்த கலவையில் சேர்க்கவும்.
வாணலியில் குறைந்தளவு எண்ணெயில் அவல் மற்றும் நசுக்கிய பூண்டினை தனித்தனியே பொரித்து பொரித்து ஏற்கனவே உள்ள பொரித்த கலவையில் சேர்க்கவும்.
அவல் மற்றும் பூண்டு பொரித்த எண்ணெய் கருப்பாகவும், நெடியுடனும் இருப்பதால் குறைந்தளவு எண்ணெயில் அவல் மற்றும் பூண்டினைப் பொரித்து எடுக்கவும். இப்பொழுது கலவையில் தேவையான உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலவையை நன்கு கலக்கவும்.