உங்க போன் ரொம்ப சூடாகுதா? அப்போ இதையெல்லாம் செக் பண்ணுங்க
பொதுவாகவே தற்காலத்தில் அனைவரும் ஸ்மார்ட்போன் வைத்திருக்கின்றோம். இப்போதெல்லாம் குழந்தைகளும் கூட போனுடன் தான் விளையாடுகின்றார்கள்.இது தவிர்க்க முடியாத விடயமாக எமது வாழ்வியலோடு இயைந்துவிட்டது என்றால் மிகையாகாது.
ஆனால் தற்போது அதிக வெப்பமடைந்து ஸ்மார்ட்போன்கள் வெடித்ததாக அடிக்கடி செய்திகள் வெளியாவதை அறிந்திருப்பீர்கள். ஸ்மார்ட்போன் அடிக்கடி சூடாகும் பிரச்சினையை பயனாளிகள் பலரும் அனுபவித்திருப்பீர்கள்.
சில ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ஒரு மணி நேரம் பயன்படுத்தி விட்டு, அதன் திரையைத் தொட்டாலே கொதிக்கும் அளவுக்கு வெப்பமடைந்திருக்கும். சில சமயம், நீண்ட நேரம் சார்ஜ் போட்டுவிட்டு, போனைக் கையில் எடுத்தாலும் அதிக வெப்பத்தை உணரலாம்.
நீண்ட நேரம் பேருந்துகளிலோ, ரயிலோ ஸ்மார்ட்போனை பயன்படுத்தினால் கூட, அதிலிருந்து வெளிவரும் வெப்பம் நமக்கு அசௌகரியமாக இருக்கும். சில ஸ்மார்ட்போன்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் கூட, பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இந்த பிரச்சினை உண்டு.
நாம் கையில் வைத்து பயன்படுத்தும் ஸ்மார்ட்போனானது, அதனினுள் இருக்கும் மின்னணு பொருள்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பத்தை வெளியேற்றுகிறது. இந்த அதிகமான வெப்பத்தை தாங்கும் வகையில் தான் மொபைல் பாகங்களும் வடிவமைக்கப்படுகின்றன.
அப்படி இருந்தாலும் கூட, ஸ்மார்ட்போனின் வேகமும், செயல்பாடும் அது சூடாவதால் குறைகிறது. மேலும் அதிகமாக சூடாவதால் போன் வெடிக்கும் அல்லது தீப்பிடிக்கும் அபாயம் ஏற்படுகின்றது. இதனை தடுக்கும் அல்லது குறைக்கும் சில வழிமுறைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
போன் சூடாவதை தடுக்க...
உங்கள் மொபைலை எப்போதுமே 100% பேட்டரியுடன் தான் வைத்திருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. எனவே 80 முதல் 90% அளவுக்கு பேட்டரி அளவு இருந்தாலே போதுமானது தான்.
சார்ஜ் போடும் போது நாம் செய்யும் இன்னொரு தவறு, முழுவதும் சார்ஜ் ஆன பிறகும் கூட, சார்ஜிங்கிலேயே போனை விட்டுவிடுவது. இது போன் அதிகம் சூடாவதற்கு காரணமாக அமையும்.
இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்வதுதான் பலரது பழக்கமாக உள்ளது. இப்படி தேவையில்லாமல் சார்ஜ் செய்வதும், போன் சூடாக ஒரு காரணம்தான்.
போன் பேட்டரி அளவை 30% முதல் 90% வரை எப்போதும் வைத்திருப்பதே, பேட்டரியின் ஆயுளுக்கும் நல்லது என்பதை எப்போதும் பின்பற்றுவது போன் அதிகமாக சூடாவதை தவிர்க்கும்.
புது போன் வாங்கியதுமே, அதனை பாதுகாக்க ஏதேனும் கவர் வாங்கி போடுவது தான் அனைவரினதும் வழக்கம். அது போனின் பாதுகாப்பிற்கு நல்லது தான் என்பதை மறுக்கவில்லை.
அதே சமயம், போனின் வெப்பம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக அமைகின்றன. நீண்ட நேரம் கேம் விளையாடும் போதோ, அல்லது இணையம் பயன்படுத்தும் போதோ மொபைல் அதிகம் சூடாகி விடும்.
அதுபோன்ற சமயங்களில் உங்கள் போன் கவரை கழற்றி விடுங்கள். கவரை தேர்வு செய்யும்பொழுது, ரப்பர் அல்லது கண்ணாடியால் ஆன கவரையே தேர்வு செய்வது வெப்பத்தை குறைக்க உதவும். பிளாஸ்டிக் அல்லது பாலிகார்பனேட் கவர்கள் வெப்பத்தை வெளியேற்றாது.
ஜிபிஎஸ், இணையம், ப்ளூடூத் அதிக நேரம் மொபைல் டேட்டா மூலம் பதிவிறக்கம் செய்வது அல்லது இணையத்தில் உலாவுவது உங்கள் ஸ்மார்ட்போனை சூடாக்கும். எனவே சிறிய இடைவெளிகளுக்கு பிறகு உங்களுக்கு தேவையானவற்றை பதிவிறக்கம் செய்யலாம்.
வைஃபை இருந்தால், அதையே பயன்படுத்துவது சிறந்தது. மொபைல் டேட்டாவை விட, குறைவான திறனே, வைஃபை எடுத்துக்கொள்ளும். உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியை உறிஞ்சும் லொகேஷன் அல்லது ஜிபிஎஸ், ப்ளூடூத், மொபைல் டேட்டா ஆகியவற்றை தேவையில்லாத நேரங்களில் ஆப் செய்து வைப்பது போன் சூடாவதை தவிர்க்கும்.
இது மட்டுமின்றி போன் சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் போதே பயன்படுத்துவது, திரையிம் ஒளி அளவை (Brightness) அதிகம் வைப்பது, பின்னால் இருந்து செயலாற்றும் செயலிகள் ஆகியன மின்சக்தியை வீணாக்குபவை. இவற்றை முடிந்தளவு குறைத்தாலே அடிக்கடி போனை சார்ஜ் செய்ய அவசியமிருக்காது.
எனவே உங்கள் பேட்டரியின் ஆயுள் குறையாமல் இருக்கும். ஏதாவது பழுது ஏற்பட்டு மொபைல் போனின் பேட்டரியை மாற்றும் போது, எக்காரணம் கொண்டு போலியான அல்லது மலிவான பேட்டரிகளை வாங்க கூடாது.
அது உங்கள் போனிற்கே ஆபத்தாக அமையலாம். போலி பேட்டரிகள் எளிதில் சூடாகி விடும். சில நேரங்களில் அதிக வெப்பத்தினால் வெடிக்கும் அபாயம் காணப்படுகின்றது. சார்ஜர் விஷயத்திலும் இது பொருந்தும்.
உங்கள் மொபைல் போனோடு வந்த சார்ஜரை தவிர்த்து, வேறு ஏதேனும் தரமில்லாத சார்ஜர்களை பயன்படுத்துவதும் ஸ்மார்ட்போனுக்கு ஆபத்து தான். யூஎஸ்பி கேபிள் கொண்டு சார்ஜ் செய்யும் பயனர்களுக்கும் இது பொருந்தும். இவற்றை கடைப்பிடித்தால் போன் சூடாவது குறைந்துவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |